நடிகர் மாதவன் நடித்து இயக்கி இருக்கும் படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இப்படத்தை ட்ரை கலர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்திய விண்வெளி துறையின் முன்னேற்றத்துக்கு காரணமானவர்களில் முக்கிய நபர் நம்பி நாராயணன். 70 தொடங்கி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு ஆய்வுகளுக்கு தன்னுடைய பங்களிப்பை வழங்கியவர். தற்போது ராக்கெட்களில் பயன்படுத்தப்பட்டு வரும் க்ரியோஜெனிக் எஞ்சின் தயாரிபில் முக்கிய பங்கு வகித்தவர். அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில் நுட்பத்தை விற்றார் என்று குற்றம்சாட்டப்பட்டு 1994 ம் ஆண்டு கேரள காவல் துறையால் கைது செய்யப்பட்ட இவர் நான்கு ஆண்டு சட்டப்போராட்டத்துகுப்பிறகு 1998ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். நாட்டுக்காக தன்னை அர்பணித்த நம்பியின் வாழ்க்கையில் நடத்த நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு வெளியாகி இருக்கிறது ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படம்.
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் மாதவன். ஆம் இயக்குனராக முதல் முயற்சியிலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிரூபித்திருக்கிறார். இந்தியா, அமெரிக்கா என வெவேறு நாடுகளில் பயணிக்கும் கதை. கதை நடக்கும் கால கட்டம், காலமாற்றம், உருவமாற்றம் என பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு சிறப்பான படத்தை கொடுத்திருக்கும் மாதவனுக்கு சிறப்பான பாராட்டுக்கள். அதையும் தாண்டி வசகர்த்தா மாதவன் ஜொலிக்கிறார். இயக்குனர் மாதவனுக்கு கடும் போட்டியை கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன். தேசிய விருது பட்டியலில் இயக்குனர் மாதவன் மற்றும் நடிகர் மாதவன் இருவருமே இடம் பெறுவதற்கான வாய்ப்பை இப்படம் பெற்றுத்தரும் என்பது நிச்சயம்.
கதை நடக்கும் காலகட்டங்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது சிரிசா ராயின் கேமிரா. சாம் சிஎஸ் இசை படத்துக்கு பலம். திரைக்கதை, வசனம் , இயக்கம் என அனைத்து வகையிலும் சிறப்பான படம். நிச்சயமாக அனைவரும் பார்த்து மற்றவர்களுக்கும் தங்கள் திரை அனுபவத்தை பகிர வேண்டிய படம்.