மிகச்சிறந்த ஒரு சமூக அரசியல் படமாக வெளியாகியுள்ளது சேத்துமான். பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் தமிழ். இதுவரை சாதிய ஒடுக்குமுறை படங்கள் என வந்தவை பெரும்பாலும் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு தமிழ்நாடு பகுதியை கதைகளமாகவே கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக, கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் மேற்கு மண்டலத்தை களமாக கொண்டு வெளியாகியுள்ளது சேத்துமான்.
சாதிய அடக்குமுறை என்பது வடக்கு கிழக்கு என்று இல்லாமல் நாடு முடுவதும் ஒவ்வொரு பகுதியுலும் ஊறிப்போயுள்ளது என்பதை இப்படம் உணர்த்துகிறது. மேற்கு மண்டல மக்கள் மென்மையானவர்கள், பாசமானவர்கள் யாரையும் அன்புடன் நடத்துவார்கள், மரியாதை கொடுப்பார்கள் என்று மட்டுமே இதுவரை திரைப்படங்கள் சொல்லிவந்த நிலையில் முதல் முறையாக மேற்கு மண்டல மக்களின் உள்ளத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய சேற்றை திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் தமிழ்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தாத்தா பூச்சியப்பனுக்கும், தாய் தந்தையை இழந்த அவருடைய பேரன் குமரேசனுக்கும் இடையேயான பாப்பிணைப்புதான் படத்தின் கதை. ஆனால் படம் சொல்லும் அரசியல் வேறு.ஒருவன் பெயரை கேட்டே அவனுடைய சாதியை கண்டுபிடிப்பது, குல தெய்வம் என்னவென்று கேட்பது, ஊருக்கு மத்தியில் குடியிருக்கிறாயா அல்லது எல்லைச்சாமி இருக்கும் இடத்துக்கு அருகே உங்கள் தெருவா? என விசாரிப்பது என பல்வேறு காரணிகள் சாதியை கண்டுபிடிக்கும் கருவிகளாக காலம் காலமாக பயன்படுத்திவரும் நிலையில், உண்ணும் உணவில் இருக்கும் சாதி அரசியலை பேசி இருக்கிறது சேத்துமான்.
மேற்கு மண்டலத்தில் இருப்பவர்களுக்கு எளிதில் புரியும் இந்த கதையும், களத்தையும் மற்ற பகுதியை சார்ந்தவர்களுக்கும் எளிமையாக கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர். மிகச்சிறப்பான திரைக்கதை, எளிமையான அதே நேரம் பொட்டில் அடித்தது போன்ற வசனங்கள் என பட்டையை கிளப்பி இருக்கிறார் இயக்குனர். இயக்குனருக்கு தன்னுடைய தோள் கொடுத்து உதவி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா. ஒளிப்பதிவாளரின் பார்வையையும், இயக்குனரின் எண்ணத்டையும் தன்னுடையை விரல்களில் தாங்கி எடிட் செய்திருக்கிறார் பிரேம் குமார். பெண் இசையமைப்பாளர் பிந்து மாலினின் உழைப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் சிறந்த காட்சிகளையோ வசனத்தையோ குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று ஆசைதான் ஆனால் முழு படத்தையும் சொல்ல வேண்டும், அனைத்து வசனங்களையும் பட்டியலிட வேண்டும்.
சேத்துமான் – போலியான ஆணவ சமுதாயத்தில் உழலும் மனிதர்கள்