லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – தயாரிப்பாளர் குமார்
”கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது’ என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் தெரிவித்திருக்கிறார்.
லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் கே. குமார் பேசுகையில், ” எங்களுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘பாரிஸ் ஜெயராஜ்’. அந்தத் திரைப்படத்தையும் விநியோகஸ்தர் பிரபு திலக் வெளியிட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற இந்த திரைப்படத்தைத் தயாரித்தோம். இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக அவரை அணுகியபோது, மனமுவந்து ஒப்புக்கொண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடுகிறார். வெளியீட்டிற்கான நெருக்கடிகள் அனைத்தையும் அவர் எளிதாக்கி, படத்தை வெளியிடுகிறார். அவர் மருத்துவர் என்பதால், எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை உணர்ந்து, இந்த திரைப்படத்தின் லாப நட்ட கணக்குகளை எதையும் கணக்கிடாமல், நட்பின் காரணமாக உடனடியாக வெளியிட ஒப்புக்கொண்டார். இதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி, எளிதாக கடந்து செல்ல முடியாது. வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது யாராவது ஒருவர் கைப்பிடித்து உயர்த்தி விட வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை பிரபு திலக் மூலமாக கிடைத்தது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் படக் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போது, நாயகன் மிர்ச்சி சிவா, உற்சாகத்துடன் நம்பிக்கையாக பேசி, ஊக்கமளித்து என்னை அதிலிருந்து மீட்டார். இயக்குநரிடம் கதை கேட்ட பிறகு, மிர்ச்சி சிவா இதில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகுதான் படத்தைத் தொடங்கினோம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லாஜிக் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் தான். திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
இந்தத் திரைப்படத்தில் பாடகர் மனோ, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் நடித்திருக்கிறார் என்றாலும், அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம்.. மறைந்த எஸ் பி பி திரையில் நடிக்கும் போது எப்படி உற்சாகமாக இருந்தாரோ.. அதே அளவு ஆற்றலுடன் மனோவும் நடித்திருக்கிறார். நடிகை மேகா ஆகாஷ் இந்த படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.
இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். பேசுகையில், ” இது எனக்கு முதல் மேடை இயக்குநராக வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. பொறியியல் பட்டதாரியான பிறகு திரைப்படத்துறையில் பணியாற்ற போகிறேன் என்று சொன்னவுடன் அனுமதித்த என்னுடைய பெற்றோருக்கும் நன்றி. 2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்த குறும்படம் தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. இதற்கு முழு முதற் காரணம் தயாரிப்பாளர் குமார். அனைவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் தான் அந்த திறமை வெளிப்படும். அந்த வகையில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த திரைப்படத்தை வெளியிடும் டாக்டர் பிரபு திலக், நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ.. என படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
பாடகர் மனோ பேசுகையில், ” இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மிர்ச்சி சிவா ஆகியோருக்கு நன்றி. ‘சிங்காரவேலன்’ படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, ‘மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது’ என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குனரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு. என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்.
‘சிங்காரவேலன்’ படப்பிடிப்பின் போது ஒரு முறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குநர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அதன் போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் ‘வணக்கம்’ வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.
படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில், ” கொரோனா தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட திரைப்படம் இது. தயாரிப்பாளர் குமார், தயாரிப்பாளர் போல் அல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, பட குழுவினருடன் இணைந்து பணியாற்றுவார். அவருடைய எளிமைக்கும், நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் இன்னும் கூடுதல் உயரங்களை தொடுவார். அடுத்ததாக இந்த படத்தின் தொடக்க விழாவின் போது வருகை தந்து படக்குழுவினரை விநியோகஸ்தர் பிரபு திலக் வாழ்த்தினார். அதற்குப் பிறகு அவருடன் உரையாடுவதற்கு தற்போது தான் நேரம் கிடைத்தது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு 11:11 என இடம்பெற வைத்திருப்பதற்கும், அதன் மேல் உள்ள இலச்சினைக்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை அறிந்து வியந்தேன். அவர் ஆன்மீகம் கலந்த அற்புதமான மனிதர்.
இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். உணவை விநியோகிக்கும் ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று கிடைக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? அவனுக்கு அவன் விரும்பியது அனைத்தும் கிடைக்கிறது. அவனுக்கும், போனுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு ஏற்படுகிறது. அதன் பிறகு அதற்கான தீர்வு என்ன?.. என திரைக்கதை இருக்கிறது. இது புதிதாக இருந்தது.
இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ் நடிக்கிறார்’ என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார், நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் மட்டுமல்ல.. இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. சரி இன்றாவது அவர்கள் வருவார்களா..! என எண்ணி வந்தேன். இங்கும் அவர்கள் வரவில்லை.
இந்தத் திரைப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில், ‘சோறு முக்கியம்..’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை படமாக்கும் போது பார்வையாளர்களாக ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். ஏனெனில் நான் முதன்முதலாக இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக நடன இயக்குநர் சாண்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலர் அருகில் இருக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரியான நேர்நிலையான அதிர்வை ஏற்படுத்தும் சாதனையாளர் தான் பாடகர் மனோ. இதுவரை இருபத்தாறாயிரம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து. இவருடன் நடிக்கும் போது, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அருகில் அமர வைத்து, அவர் பாடிய பாடல்களை பாடுமாறு கேட்பேன். அவரும் சலிக்காமல் பாடி, அனைவரையும் உற்சாகப்படுத்துவார். இதன் தொடர்ச்சியாக அவர் அவருடைய வீட்டிலிருந்து மதிய உணவை வரவழைத்து பட குழுவினருக்கு வழங்கி அவருடைய விருந்தோம்பலை வெளிப்படுத்துவார். இதற்காகவே அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் நானும் அவருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் தவறவிட்ட குழந்தைத்தனத்தை அவர் இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் பேசுகையில், ” திரைப்படங்கள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாதித்திருக்கிறேன். ‘ரோட்டி கபடா மக்கன்.. உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம்.’ இந்த மூன்றும் இருந்தால் மனித வாழ்க்கை நிறைவு பெறுகிறது என்றொரு தத்துவம் இருக்கிறது. இது அனைத்து மக்களிடத்திலும் பொதுவான நம்பிக்கையாக இருந்தாலும், இதையும் கடந்து ஒரு சமுதாய அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நமக்குள் எவ்வளவு அழுத்தங்களும்.. நெருக்கடிகளும்.. உண்டாகின்றன என்பது குறித்தும் மிர்ச்சி சிவாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.
ஒரு சிறிய அடையாளத்திற்காக அல்லது நம்முடைய இலக்கை அடைவதற்காக.. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் பல வகையிலான ஓட்டங்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். ஒரு மருத்துவராக இது குறித்து என்னிடம் சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளிடம் பேசும் போது.. ‘ஐம்பது வயது வரையிலும் நாம் நிறைய ஓடுகிறோம். எந்த துறையினராக இருந்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டத்தின் போது நாம் நம்முடைய ஆரோக்கியத்தை தவற விட்டு விடுகிறோம். ஆனால் ஐம்பது வயதிற்கு பிறகு, ஒரு மருத்துவரை தேடி, சந்தித்து, அவருக்கு இழந்த ஆரோக்கியத்தை மீட்பதற்காக கட்டணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு தேவையான விசயம் தான் நகைச்சுவை எனும் உணர்வு. நகைச்சுவை என்ற உணர்வு இல்லாத போது வாழ்க்கை வற்றி விடுகிறது.’ என குறிப்பிடுவேன்.
பெர்னட் ரஸ்ஸல் எனும் உளவியல் தத்துவ மேதை,“ரோட்டி கபடா. மக்கன் ஆகிய மூன்றையும் கடந்து கிடைக்கும் சமூக அங்கீகாரம் தான் மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம்” என குறிப்பிடுகிறார். தற்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். தயாரிப்பாளர் குமார் படத்தை தயாரித்திருக்கிறார். விக்னேஷ் இயக்கி இருக்கிறார். சிவா நடித்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இவை அனைத்தின் பின்னணியிலும் ஏதோ ஒரு காரணம் இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்தால்.. நாம் அனைவரும் இயந்திரம் அல்ல.. இதனை இழுத்து பிடித்து நிறுத்த ஒரு அழகான உணர்வு தேவைப்படுகிறது. அந்த அழகான உணர்வும், நகைச்சுவையும் இந்தத் திரைப்படம் உங்களுக்கு வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்காகத்தான் எங்கள் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டின் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும். இங்கு தயாரிப்பாளர் பேசுகையில் ‘லாஜிக் தேவையில்லை’ என குறிப்பிட்டார். உண்மையில் சில விசயங்களுக்கு லாஜிக் தேவையில்லை.
தமிழ் சினிமா ஆக சிறந்த நகைச்சுவை கலைஞர்களை நமக்கு அளித்திருக்கிறது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தொடங்கி சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ் .. முதல் தற்போது வரை நிறைய நகைச்சுவை கலைஞர்களை வழங்கி இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் ஃபோர்தாட் எனப்படும் எதிர்காலம் குறித்த சிந்தனை இருந்தது. அதாவது மன அழுத்தத்தை உடைப்பது மட்டுமே நகைச்சுவை கலைஞர்களின் பணி அல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன். என். எஸ். கே, 50- 60களில் அவர் நடித்த படங்களில்.. ஒரு தீர்க்கதரிசியை போல் நிறைய விசயங்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தை கணித்து சில விசயங்களை அவர் பேசியிருக்கிறார். அவர் ஒரு படத்தில் ‘பட்டனை தட்டினால் சட்டினியும் இட்டிலியும் தட்டுல வந்து விழும்’ என ஒரு பாடலை அவர் எழுதிப் பாடியிருக்கிறார். அது போல் தற்போது நடக்கிறது அல்லவா..!! சந்திரபாபு, “புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” என பாடியிருப்பார். இந்த பாடல் நம்முடைய வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். மறைந்த சோ, எஸ் வி சேகர் போன்ற நாடக கலைஞர்கள் அரசியல் ரீதியான கேலி கேள்விகள் மூலம் நமக்குள் அரசியலை உணர்த்தியிருக்கிறார்கள். ஏராளமான சிந்தனையாளர்கள், தங்களுடைய நகைச்சுவையின் மூலம் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.
பின்னணி பாடகர் மனோவுடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருப்பது, கடவுள் எனக்களித்த ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த ‘டபுள் எஸ் டபுள் எஸ்’ படத்தில் எதிர்காலம் குறித்த சிந்தனை இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு குறித்து சிந்தித்திருக்கிறார். இன்றைய சூழலில் நாம் மனிதர்களுடன் பழகுவதற்கு எவ்வளவு தயங்குகிறோம். இந்த திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த விசயத்தை ஆடம்பரமான ஜோடனைகள் எதுவுமில்லாமல்.. யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு பின்னணியில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏராளமானவர்களின் உழைப்பு இருக்கிறது. அதனால் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.