அஜீத்குமார், மஞ்சு வாரியார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் துணிச்சல். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜீத் ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் என அனைவரையும் மனதில் கொண்டு ஒரு தரமான வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.
தனியார் வங்கிகள் பங்குச்சந்தையில் செய்யும் மோசடிகள், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் சுருட்டல், பல லட்சம் ஏழை எளிய மக்கள் பாதிப்படைவது போன்ற சீரியஸான விசயங்கள் என ஒரு லைன், வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஒரு கும்பல் ஒரு லைன், அதைத்தாண்டி அனைவரையும் ஓவர்டேக் செய்து அடித்து துவம்சம் செய்யும் இண்டர்நேஷ்னல் கிரிமினலான அஜீத், அவரது பின்னணி என மூன்று லைன்களும் ஒன்றிணைவதுதான் துணிவு படத்தின் கதை.
வங்கிக் கொள்ளை திட்டத்துடன் தொடங்கும் படம், ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக நகரத்தொடங்குகிறது, ஒரு சில நிமிடங்களில் அஜீத் எண்ட்ரியாக, அதன் பிறகு திரையில் அதகளம் நடத்துகிறார் அஜீத். வங்கிக் கொள்ளையர்கள், போலீஸ் என அனவரையும் கூலாக டீல் செய்வது, மைகேல் ஜாக்சன் பாணியில் டான்ஸ் ஆடுவது என அனைவரையும் கட்டிப்போடுகிறார். அவருக்கு இணையாக ஆக்சனில் கலக்கி இருக்கிறார் மஞ்சு வாரியார். காவல்துறை ஆணையராக சமுத்திரக்கனி, வில்லன் பாத்திரத்தில் நடிட்திருக்கும் ஜான் கொக்கேன், நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கும் பால சரவணன், பட்டி மன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் என அனைத்து பாத்திரங்களும் மனதில் பதிகின்றன.
படத்தில் கையாளப்பட்டிருக்கும் வங்கி முறைகேடுகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாக புரியவைத்திருப்பதுடன், திரைக்கதையை டிஸ்டர்ப் செய்யாமல் சில அறிவுறுத்தல்களையும் சொல்லி இருக்கும் இயக்குனர் எச். வினோத்துக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். கேங்ஸ்டர் பாடலும், சில்லா சில்லா பாடலும் வரும்போது தியேட்டரே எழுந்து ஆடுகிறது, பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா திறமை பளிச்சிடுகிறது, குறிப்பாக சண்டை காட்சிகளில் சுழன்று சுழன்று சுட்டுத்தள்ளி இருக்கிறார். விஜய் வேலுக்குட்டியில் படத்தொகுப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம்,
அதிவேக திரைக்கதை, ஆங்காங்கே நகைச்சுவை, அதிரடி ஆக்சன், ஆட வைக்கும் பாடல் காட்சிகள் என முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக வெளியாகியுள்ளது துணிச்சல்
துணிச்சல் அதிரடி அதகளம்