வத்திக்குச்சி படத்துக்குப்பிறகு இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ட்ரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிப்பில், ஜிப்ரான் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜேஸின் தந்தை கூலிப்படையால் கொல்லப்பட்டுவிட, உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார், வீட்டைவிட்டு ஓடிப்போன தம்பி என வீட்டின் கடுமையான சூழ்நிலை காரணமாக கால்டாக்ஸி ட்ரைவராகிறார் ஐஸ்வர்யா ராஜேஸ், அரசியல்வாதியான ஆடுகளம் நரேனை கொல்ல திட்டமிடும் கூலிப்படை, ஐஸ்வர்யா ராஜேஸின் காரில் பயணிக்கும் சூழ்நிலையில், ஒரு புறம் கூலிப்படையின் அச்சுறுத்தல் மறுபுறம் துரத்திவரும் போலீஸ் என கடுமையான நெருக்கடியை ஜஸ்வர்யா ராஜேஸ் எப்படி கையாண்டார் என்பதே ட்ரைவர் ஜமுனா படத்தின் கதை
படம் முழுக்க முழுக்க பரபரப்பாக நகர்கிறது, ஐஸ்வர்யா ராஜேஸ் கூலிப்படையினரை காரில் ஏற்றிகொண்டு கிளம்பும்போது சீட் நுனிக்கு வரும் ரசிகர்கள், படம் முடியும் வரை சீட் நுனியிலேயே அமர்ந்து படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். அவ்வளவு பரபரப்பான நேரத்தில் காமெடி காட்சிகளை உறுத்தாமல் திரைக்கதையில் நுழைத்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தவும் செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஸின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படம், தந்தையின் இறப்பு, தம்பியின் ஏமாற்றம் , தாயின் உடல்நிலை போன்றவற்றால் முகத்தில் சிரிப்பை மறந்த கதாபாத்திரமாக சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் அனைவரையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் ஆடுகளம் நரேன், அவருடைய பாத்திரமும் சரி நடிப்பும் சரி மிகச்சிறப்பாக இருக்கிறது. மணிகண்டன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்
பரபரப்பான சேஸிங் திரைப்படத்துக்கு தேவையான ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு, சாலையில் நடக்கும் சேஸிங் மட்டுமல்லாமல் காருக்குள் நடக்கும் காட்சிகளிலும் தன்னுடைய கைவண்ணத்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய். சேஸிங்கின் போது ஐஸ்வர்யா ராஜேஸின் முகபாவங்களை வைத்து காட்சிகளை உணரவைக்கும் வித்தியாசமான டெக்னிக்கை பயன்படுத்தி இருக்கிறார் எடிட்டர் ஆர்.ராமர். ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்
ஆங்கிலப்படங்களுக்கு இணையான ஒரு பரபரப்பான சேஸிங் படமாக வெளியாகி உள்ளது ட்ரைவர் ஜமுனா
ட்ரைவர் ஜமுனா: ரோலர் கோஸ்டர் பயணம்