முருகதாஸ் எழுத்தில், எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வித்தியாசமான வெற்றிப்படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில், த்ரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ராங்கி. இப்படத்தை லைகா புரொடென்ஸன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இணையதள ஊடகம் ஒன்றில் பணியாற்றி வரும் த்ரிஷா, தன்னுடைய அண்ணன் மகளுக்கு ஏற்படும் சமூக ஊடகம் தொடர்பான சிக்கலை தீர்க்கும் முயற்சியில் இறங்க, அது வெறும் சமூக ஊடகப்பிரச்சினை அல்ல, சர்வதேச தீவிரவாதப் பிரச்சினை என்று தெரியவருகிறது. மேலும் தங்களை பணயம் வைத்து தீவிரவாத பிரச்சினை சுழல்கிறது என்பதையும், தாங்கள் எப்படி இந்த சுழலில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் தெரிந்து கொள்ளும் த்ரிஷா, அதிலிருந்து எப்படி தன்னையும், தங்கள் குடும்பத்தையும் மீண்ட்டார் என்பதே ராங்கி படத்தின் கதை.
எப்போதும் தன் படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் சரவணன் இப்படத்திலும் அதை நிரூபித்திருக்கிறார். ஃபேக் ஃபேஸ்புக் அக்கவுண்டில் தொடங்கி சர்வதேச தீவரவாதம் வரை நீளும் கதையை மிகச்சிறப்பாக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர். த்ரிஷாவின் அண்ணன் மகள் கதாபாத்திரத்தை வைத்தே திரைக்கதை பின்னப்பட்டிருப்பதும், ஆனால் அது குறித்து அந்த கதாபாத்திரத்துக்கு எதுவுமே தெரியாது என்பதும் திரைக்கதை சுவாரஸ்யம்
பெண்களை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் இப்படத்தில் சற்றே தந்திரமும், தைரியமும் கலந்த கதாபாத்திரம் த்ரிஷாவுடையது. தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை அடித்துச் சொல்லி இருக்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் கதாபாத்திர அறிமுக காட்சியே அதற்கு சாட்சி, பெண்கள் தொடர்பான சிக்கல்களை அனுகும் விதம், திமிரான உடல்மொழி, அசால்டான பேச்சு, தன்னை காதலிக்கும் தீவிரவாதியை ஹேண்டில் செய்யும் விதம் என மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
பாலைவனப்பகுதிகளில், மணற்புழுதியில் புகுந்து வருகிறது கே.ஏ.சக்திவேலின் கேமிரா, குறிப்பாக சண்டைகாட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமை மின்னுகிறது. படத்தின் தன்மை உணர்ந்து அதிவேகமாக நகர்த்தி இருக்கிறார் எடிட்டர் சுபாரக். சி. சத்யவின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது
ராங்கி: பவர் ஃபுல்