பத்திரிகை ஊடகத்துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் முன்னேறி வந்த இளம் பத்திரிகையாளர் தென்காசி மாவட்டம் புளியங்குடி சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( வயது 24 ).விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி திட்ட த்தில் பங்கேற்று நிறைவு செய்து தற்போது புதியதலைமுறை டிஜிட்டலில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று (22-10-2022 ) சனிக்கிழமை இரவு பணி முடித்து சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே நடந்து சென்றிருக்கிறார்.அப்போது வாகனம் வந்தபோது சாலையில் ஒதுங்கியதில் அங்கு மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் கால்வாய் பள்ளத்தில் கீழே விழுந்திருக்கிறார்.அரை மணி நேரத்திற்கும் மேல் எவராலும் கண்டுக்கொள்ளப்படாமல் தவித்த முத்துகிருஷ்ணனை அந்த வழியே சென்ற காவலர் ஒருவர் மீட்டு , ஆட்டோவில் முத்துகிருஷ்ணன் தங்கியிருந்த கந்தன் சாவடிக்கு அனுப்பியுள்ளார்.அவரது நண்பர்கள் காயங்களுடன் வந்த முத்துகிருஷ்ணனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுய நினைவை இழந்த முத்துக்கிருஷ்ணனை இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் வந்து மருத்துவர்கள் சந்தித்து அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று (23-10-2022) பிற்பகலில் உயிரிழந்தார்.
ஊடகத்துறை கனவுகளோடு வந்த முத்துகிருஷ்ணன் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிரற்ற உடலாக, அவரது தாயாரின் கண்ணீர் கதறல் சொல்லமுடியாத துக்கத்தைத் தருகிறது.கண்ணீருடன் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.
பத்திரிகையாளார் முத்துக்கிருஷ்ணனின் உயிர்பலிக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.மறைந்த பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.
தீராத துயரத்துடன்
பாரதிதமிழன்
இணைச் செயலாளார்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
23-10-2022