Friday, November 15, 2024
Home Uncategorized தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ்...

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்…

“கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.” என்று பேசினார்.

இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது.

இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை! அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது.

அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள்.. இராசராசன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு! ஆனால் இராசராசசோழனை, இராஜேந்திரசோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்லுவது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது. காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் தமது தெய்வக்குரல் நூலில்.. “நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று நம்மை ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம் என்றார்” அந்தப் ”பிழைத்துக் கொண்டோம்” என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அவரை அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.

ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும் அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இராசராச சோழனை இந்து என்று மாற்றநினைப்பது, மட்டுமா நடந்தது? தமிழை சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளிநாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை குதிரையாக திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள். முப்பால் யாத்த வள்ளுவப் பெருந்தகைக்கு காவியும் பூணூலும் அணிவித்தார்கள். தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம்.. எதையெல்லாம் காவியாக்க முடியுமே அதையெல்லாம் மாற்றமுற்படுவார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும்; வந்துகொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச்சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வை அடையவேண்டும்.

தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, தமிழர் கோயில்களை, ஊர்ப் பெயர்களை, இப்படி பல்வேறு தளங்களில் இந்தி – சமற்கிருத – காவி அடையாங்களாக மற்றுவதற்கான ஆரிய நுண்ணரசியல் பலகாலம் தொட்டு நடந்தேறுகிறது. அது அண்மைக்காலமாக வேகமெடுத்துள்ளது. அதை நாம் முறியடிக்கவேண்டும். அதன் ஒரு கூறுகத்தான்.. ஆர்.எஸ்.எஸ். பேரணி.. இதற்குமுன் வேல்யாத்திரை, இராமராஜ்ய ரதயாத்திரை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்தது.

இந்தியாவை ‘பாரத்’, ‘பாரத் வர்ஷா” என்று மாற்றுவதற்குரிய சட்ட வேலைகளை பா.ஜ.க.முன்னெடுக்கிறது.. மிகவிரைவில் இந்தியா பாரத் ஆக மாறும். இந்து மதம் என்னவாக மாறும் என்பதும் அவர்கள் மனுதர்மபடிதான் நடக்கும்!

ஆகவே நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். கலை மக்களுக்கானது! கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம்!

இங்ஙனம்
சேது. கருணாஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments