‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டீபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.
வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜனவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழு கலந்துக்கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில், “எங்கள் கண்ணப்பா படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. மேடையில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என ‘கண்ணப்பா’ படக்குழுவினர் அனைவரும் கடவுள் சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக நான் கடவுள் சிவனால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதனால், தான் என் முதல் படத்திலேயே இந்திய திரையுலகின் முன்னணி கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்ணப்பா பிரமாண்டமான திரை காவியம் மட்டும் அல்ல தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில், “மோகன் பாபு சார், விஷ்ணு சார் அனைவருக்கும் நன்றி. ‘கண்ணப்பா’ படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. 100 பேருக்கும் மேற்பட்ட ஒரு பெரும் குழுவை நியூசிலாந்து நாட்டுக்கு அழைத்துச் சென்று இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். நான் ஒரு முறை அங்கு சென்றிருந்த போது, மூன்று கேமராக்கள் வைத்துக்கொண்டு விஷ்ணு சார் சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் அதேபோல் மூன்று கேமராக்கள் வைத்துக் கொண்டு ஒரு குழு இருந்தது, அது யார்? என்று கேட்டேன், அதுவும் நம்ம படம் தான், மதுபாலா மேடம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது, என்று விஷ்ணு சொன்னார். மற்றொரு பக்கம் மூன்று கேமராக்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள், அங்கு என்ன நடக்கிறது? என்றால், சரத்குமார் சாரின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது, என்றார். இப்படி மிகப்பெரிய குழுவுடன் ஏகப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது, எடிட் செய்வதற்கும் சவாலாக இருக்கிறது. படம் சூப்பராக வந்திருக்கிறது. படத்தொகுப்பு செய்ய உதவிய இணை இயக்குநருக்கு நன்றி. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில், “பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்த படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த விஷ்ணு சாருக்கு நன்றி. இந்த படத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஷெல்டன். அமெரிக்க ஒளிப்பதிவாளர் அவர். நான் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக தான் பணியாற்றியிருக்கிறேன். விஷ்ணு சார் என் குடும்ப நபர் போன்றவர், அவர் தான் என்னை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்தினார். விஷுவலாக படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. கண்ணப்பாவின் முக்கியமான கதை, அவர் யார்?, அவர் எப்படிப்பட்ட சிவ பக்தர் போன்றவற்றை தாண்டி, படத்தின் மற்ற அம்சங்கள் அனைத்தும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. விஷ்ணு சாருக்கு என் வாழ்த்துகள். பிரபு மாஸ்டர், சரத்குமார் சார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.
நாயகி ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், புது வருடத்தில் உங்களை தான் முதல் முறையாக சந்திக்கிறேன், அதுவும் ‘கண்ணப்பா’ போன்ற பிரமாண்டமான படத்திற்காக சந்திப்பது மகிழ்ச்சி. இவ்வளவு பெரிய படத்தில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன். விஷ்ணு சார், மோகன் பாபு சார், இயக்குநருக்கு நன்றி. இந்த குழு ஒரு குடும்பம் போல் இருந்தது, என்னை ரொம்ப நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இந்த படம் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் நடிப்பதற்காக தான் திரையுலகிற்கு வந்தேன், ஆனால் இந்த படத்தில் பணியாற்றும் போது, ஒரு காட்சிக்காக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், ஒரு காட்சியை கூட்டு முயற்சியின் மூலம் எப்படி அழகாக கொண்டு வருகிறார்கள், என்பதை பார்த்து எனக்கு பிலிம் மேக்கிங் மீது ஃபேஷன் வந்துவிட்டது. இந்த படத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. உண்மையாகவே படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களது பெரும் முயற்சியினால் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், “பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்களுக்கு காலை வணக்கம். இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த காலக்கட்ட தலைமுறைக்கு சரித்திரம், இதிகாசங்களை நினைவுப்படுத்த வேண்டும், கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம், அதைப் பற்றி நிச்சயம் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும், என்று இயக்குநர் சொன்னார். அது தான் இந்த படத்திற்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். மோகன் பாபு சார், விஷ்ணு இருவருக்கும் வாழ்த்துகள், இந்த படத்தை உருவாக்கியதற்கு. கடுமையாக உழைத்திருக்கிறார்கள், உண்மையாக, நேர்மையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களது உண்மையான உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும், என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். கண்ணப்பா ஒரு வரிக் கதை தான், கண்ணப்பா யார் என்பது தெரியும், அவர் என்ன செய்தார் என்பது தெரியும். கண்ணப்பா தான் கண் தானத்திற்கு முதலில் வித்திட்டவர், என்று தொகுப்பாளினி சொன்னார்கள், அதுவும் உண்மை தானே. ஆனால் அதை எல்லாம் தாண்டி, கண்ணப்பா கதையை, உண்மை சரித்திரத்தை மிக பிரமாண்டமான முறையில் விஷ்ணு கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்காக விஷ்ணு நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். இந்த படத்திற்காக எதை செய்தாலும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் என்னை வியக்க வைத்தது. மிகப்பெரிய குழுவை நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை. பொருளாதார ரீதியாகவும், மெனக்கெடல் ரீதியாகவும் சாதாரன விசயம் இல்லை, அதை விஷ்ணு மிக சிறப்பாக செய்திருக்கிறார். அதிகமான குளிர் இருந்தாலும் மேக்கப் போட்டு 7 மணிக்கு அனைவரும் படப்பிடிப்பில் பங்கேற்பது சாதாரண விசயம் இல்லை. சிவன் மீது பக்தி இருக்கிறதோ, இல்லையோ அவரைப் பற்றிய படத்தில் மிகவும் பயபக்தியுடன் ஒட்டுமொத்த படக்குழுவும் பணியாற்றினார்கள்.
என்னை பொறுத்தவரை பிரமாண்டம் ஒரு பக்கம், நடித்தவர்கள் அனைவரும் முன்னணி கலைஞர்கள். அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு சார் என பெரிய பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படம். அதே சமயம், பெரிய நட்சத்திரங்களுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை, அந்த அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். இயக்குநர் முகேஷ் குமார் சிங் பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிகிறது, ஆனால் தெலுங்கு திரைப்படத்தை, பான் இந்தியா அளவில் கொண்டு செல்வதற்கான நுணுக்கங்களுடன் இந்த படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றியது பெருமை என்கிறார், அவருடன் பணியாற்றியதை நானும் பெருமையாக கருதுகிறேன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, பிரபு தேவா ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அழகாக இருக்கிறார், இங்கேயும் அழகாக இருக்கிறார். மோகன் பாபு சார், விஷ்ணு அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்கள். பிரபு தேவாவின் நடனக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மிக சிறப்பான படம், உணர்வோடு அனைவரும் நடித்திருக்கிறோம். ஏப்ரல் 25 ஆம் தேதி படம் வெளியாகிறது, படத்தை போல் வெற்றியும் பிரமாண்டமாக அமைய வேண்டும், என்று கடவுளை வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
பிரபு தேவா பேசுகையில், “இந்த படத்திற்காக மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். மோகன் பாபு சார் எனக்கு போன் பண்ணி என்னை வர வேண்டும் என்று சொன்னார். நான் வரணுமா சார், என்றேன், ”நீ வரலனா நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன்” என்றார். நானே வந்துட்றேன் சார், என்றேன். மூன்று பாடல்களிலும் நடனம் பெரிதாக இருக்காது, ஆனால் எமோஷனல் இருக்கும். அதேபோல் கிளைமாக்ஸ் பாடல் மிகவும் முக்கியமானது, அதில் நீ முக்கியமாக இருக்க வேண்டும், என்று சொன்னார். எனக்கும், கிளைமாக்ஸில் பாடல் என்பது இது தான் முதல் முறை. அதேபோல் அதில் நடனத்தை விட எமோஷனலை கொண்டு வர வேண்டும் என்பது சவலாக இருந்தது, அதனால் பணியாற்றவும் ஆர்வமாகவும் இருந்தது. இயக்குநர் முகேஷ் குமார் சிங் என்றதும், அவர் இந்தி அவருக்கு எப்படி நமது கலாச்சாரம் தெரியும், என்று நான் யோசித்தேன். ஆனால், அவருக்கு சிவனைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. எங்க அனைவரையும் விட அவருக்கு தான் அதிகம் தெரிந்திருக்கிறது. இந்த படத்தை இயக்குவதற்கு அவர் தான் சரியான நபர், சிறந்த இயக்குநர். அமெரிக்கன் ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். விஷ்ணு எனக்கு தம்பி போல, மோகன் பாபு சார் எனக்கு பெரிய அண்ணன். அவருக்கு என் வாழ்த்துகள். படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு ஒரு தயாரிப்பாளர் போல் இருக்க மாட்டார், ஒரு உதவி இயக்குநர் போல், புரொடக்ஷன் உதவியாளர் போல தான் இருப்பார். தயாரிப்பாளர் பக்கம் நிற்காமல், தொழில்நுட்ப கலைஞர்கள் பக்கம் இருப்பார், அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன் நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சித்தார்த் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கு மீடியா முன்பு பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கும். இது என் முதல் தமிழ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பெருமையாக இருக்கிறது, கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான், தமிழ் நன்றாக பேசுவேன். ரொம்ப நாளாக தமிழ் பேசாததால் கொஞ்சம் பிழை இருக்கலாம், மன்னித்துக் கொள்ளுங்கள். 15 வருடங்களுக்கு முன்பு நான் நடிகனாக தொடங்கினேன். அன்று முதல் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று சிவன் அருளால் என் ஆசை நிறைவேறியிருக்கிறது, அதுவும் கண்ணப்பா மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு இருந்தே சரத்குமார் அங்கிளுடன் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்ட்டு இருந்தேன், இப்போது அது நடந்திருக்கிறது. என் அப்பா மீது உள்ள மரியாதை காரணமாக தான் அவர் நடித்தார். காலையில் 7 மணிக்கு மேக்கப்போடு படப்பிடிப்பில் பங்கேற்போம், என்று அவர் சொன்னார். அந்த நேரத்தை நிர்ணயம் செய்ததே அவர் தான். அவர் நினைத்திருந்தால், அந்த கடும் குளிரில் 9 மணிக்கு வருகிறேன், என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் 7 மணிக்கு மேக்கப் உடன் படப்பிடிப்பு தளத்தில் வருவார், அவரைப் பார்த்து மற்ற கலைஞர்களும் அதே நேரத்திற்கு, சிலர் அதற்கு முன்பாகவும் வந்துவிடுவார்கள், அவருக்கு என் நன்றி. பிரபு அண்ணா, அவர் என் அப்பாவை அண்ணா என்று அழைப்பார், நான் அவரை அண்ணா என்று அழைக்கிறேன். நான் சிறு வயதில் அவரது வீட்டுக்கு சென்று நடனம் கூட கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவாக தான் இருக்கும். அவர் நடன இயக்குநராக பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் கேட்டுக்கொண்டதற்காக அவர் எங்கள் படத்தில் பணியாற்றினார். இரண்டு முறை நியூசிலாந்துக்கு அவர் வந்தார், அவருக்கு நன்றி. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும், நான் பிரபு அண்ணா தான் நடனம் அமைக்க வேண்டும், என்று முடிவு செய்தேன் என்று. இயக்குநர் முகேஷ் சார், படம் இயக்குவது இது தான் முதல் முறை. அவர் நிறைய டிவி தொடர்கள் இயக்கியிருக்கிறார். நான் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன், முகேஷ் சார் உடனான என் உறவு ரொம்பவே ஸ்பெஷல். நான் படம் தொடர்பாக குழப்பமாக இருக்கும் போது, எனக்கு பெரும் உதவியாக இருந்தார். படத்தொகுப்பாளர் ஆண்டனி, ’காக்க காக்க’ படம் பார்த்தது முதல் அவருடைய ரசிகனாகி விட்டேன். அவர் ஒரு வாரத்தில் முழு படத்தையும் எடிட் செய்துவிடுவார், ஆனால் என் படத்தை ஒரு வருடமாக எடிட் செய்துக் கொண்டிருக்கிறார். கேமரா மேன் சித்தார்த், என் சகோதரர். அவர் எனக்காக இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தியை நாங்கள் தான் அறிமுகப்படுத்த இருந்தோம், ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அறிமுகமாகி விட்டார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார், நிச்சயம் பெரிய நடிகையாக வருவார். கண்ணப்பா பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான், நாங்கள் அதிகம் கஷ்ட்டப்பட்டிருக்கிறோம், அனைவரும் கஷ்ட்டப்பட்டு தான் படம் எடுக்கிறார்கள். கண்ணப்பா ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும், எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும். நன்றி.” என்றார்.
கண்ணப்பா படத்தை நியூசிலாந்தில் படமாக்க காரணம் என்ன? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு மஞ்சு, “இந்த கேள்வியை நிறைய பேர் கேட்கிறார்கள். கண்ணப்பா கதை 3 வது நூற்றாண்டில் நடக்கிறது. அந்த காலக்கட்டத்தில் நீர், காற்று, வனம் என அனைத்தும் எவ்வளவு பசுமையாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். கண்ணப்பா கதையை என்னிடம் கொடுத்தவருக்கு தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால், நான் அந்த கதையை விரிவுப்படுத்தி எழுதியதோடு, படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய தொடங்கி விட்டேன். உலகின் பல நாடுகளுக்கு சென்று பார்த்த போது, நியூசிலாந்து நாடு தான் சரியான இடமாக இருந்தது. கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது நியூசிலாந்து தான். நம் நாடும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்திருக்கும், ஆனால் நாம் அதை இப்போது கெடுத்து விட்டோம். கண்ணப்பா படத்தின் கதை அப்படி ஒரு இடத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினேன், அதனால் தான் அங்கு படப்பிடிப்பு நடத்தினேன். படத்தில் நீங்கள் பார்க்கும் போது கிராபிக்ஸ் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்கள் அனைத்தும் லைவானவை, அந்த அளவுக்கு நீர், வனம் என அனைத்தும் மிக அழகாக இருக்கும்.” என்றார்.
மேலும், கண்ணப்பா யார்? என்ற ஆரம்பக் கதையை காமிக்ஸாக படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு தொகுப்புகளாக இதுவரை 80 ஆயிரம் பிரதிகள் வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் மூன்றாவது தொகுப்பையும் வெளியிட இருப்பதாகவும், கண்ணப்பா காமிக்ஸுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு, நிச்சயம் படத்திற்கும் கிடைக்கும், என்று விஷ்ணு மஞ்சு தெரிவித்தார்.