தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாக்குடியில் வீரப்பன் என்கிற பாரதி மோகன் – ரத்தினம்மாள் தம்பதியின் மகனாக 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்தார் சிவக்குமார். ஆரம்பப்பள்ளிக் கல்வியை வாட்டாக்குடியில் முடித்தவர், மேல்நிலைக் கல்வியை சென்னை ஆவிச்சி பள்ளியில் தொடர்ந்தார்.
அப்பா பாரதி மோகன் ‘யார் குற்றவாளி’, ‘அத்தான்’ ஆகிய படங்களைத் தயாரித்து, பாடல்கள் எழுதியவர். அவருடைய அறைத் தோழர்களாக இசையமைப்பாளர் ரவீந்திரன், பாடகர் ஜெயச்சந்திரன் மற்றும் நடன இயக்குநர் சலீம் ஆகியோர் இருந்தனர்.
ஸ்டுடியோக்களுக்கு அப்பா போகும்போது உடன் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார் சிவக்குமார். அப்பாவின் பரிந்துரையில் ரவீந்திரனிடம் மார்க்கிங் உதவியாளராகச் சேர்ந்தார். ஒரு படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பதற்கு, காட்சிகளை ஓடவிட்டு, எந்த இடத்திலிருந்து எதுவரை இசை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பு எழுதுவதுதான் மார்க்கரின் வேலை. அதில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றினார் சிவக்குமார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் குருநாதர் நித்யானந்தம் இவருக்கு கீபோர்டு வாசிக்க கற்றுக்கொடுத்தார். இளையராஜாவிடமிருந்த சக்திவேலிடம் ஆர்மோனியம் கற்றுக்கொண்டார். சலீல் சவுத்ரி, லக்ஷ்மிகாந்த்- பியாரிலால், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் ‘மியூசிக் மார்க்கர்’ பணியை 2000 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார் சிவக்குமார்.
ரவீந்திரன் மற்றும் ஸ்யாம் ஆகியோரின் மலையாளப் படங்களில் பணியாற்றியபோது குட்டி கிருஷ்ணன் என்கிற தயாரிப்பு நிர்வாகி அறிமுகமாகியிருக்கிறார். அவரது பரிந்துரையில் சிவக்குமாருக்கு கிடைத்த படம் ‘தந்த்ரா’.
அரவிந்த் ஆகாஷ்- ஸ்வேதா மேனன் நடித்த அந்தப்படத்தை கே.ஜே.போஸ் இயக்கியிருந்தார். அந்தப்படத்துக்கான பின்னணி இசைச்சேர்ப்பை ஒரு ரீல் மட்டும் பார்த்த இயக்குநர், ‘நான் அடுத்த வேலைகளைப் பார்க்கிறேன். உங்கள் விருப்பப்படி இசைப்பணியைச் செய்யுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
அந்தப்படத்துக்கு டி.டி.எஸ் எஞ்சினியராக பணியாற்றிய அஜீத், ‘உங்களுக்கு விருது கிடைக்கும்’ என்று வாழ்த்தியிருக்கிறார். அவரது வாக்கு பலித்தது. இசையமைத்த முதல் படத்துக்கே கேரள அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது சிவக்குமாருக்குக் கிடைத்தது. சினிமாவுக்காக வீ.தஷி என்று பெயர் மாற்றிக்கொண்டார்.
மலையாள முரளி நடித்த ‘அச்சன்டே பொன்னுமக்கள்’, மோகன்லால் நடித்த ‘பகவான்’, ‘கோபாலபுரம்’, ‘வெள்ளியங்காடி’, ‘குண்டாஸ்’, ‘டர்னிங் பாய்ண்ட்’ என 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தஷி.
இவரது ‘தந்த்ரா’ படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சந்திரன், ‘மாணவன் நினைத்தால்’ தமிழ்ப்படத்துக்கு இசையமைக்க இவரை நியமித்தார். அந்தப்படத்தில் மாணிக்க விநாயகம் பாடி, மணிவண்னன் நடித்த ‘காதல் கொள்ளாதே பூமணமே…’, சொர்ணலதா- சுபீஷ் பாடிய ‘பேரழகா உன் பேரழகா…’ பாடல்கள் பெயரை வாங்கிக் கொடுத்தன.
கோமளாவை மனைவியாக கைபிடித்த பிறகே தனது இசை வாழ்க்கையில் ஒளி தெரிந்ததாகக் குறிப்பிடுகிறார் தஷி. இரண்டு மகன்களில் ரங்கராஜ் பியானோவில் ஆறு டிகிரி முடித்துள்ளார். இன்னொரு மகன் கிரண், டிரம்ஸ் வாசித்து, பள்ளிக்கூடத்தில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார்.
இதுவரை 2400 தெய்வீக ஆல்பங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தஷி. 90 பாடகர்களையும், 80 பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. லைவ் ஆர்க்கெஸ்ட்ராதான் இசைக்கு உயிர் தரும் என்பது இவரது கருத்து.
தனது படங்களில் தில்ரூபா, சிதார், வீணை, தபேலா, டோலக், வயலின், எடக்கை, உடுக்கை ஆகிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வருகிறார்.
சலீல் சவுத்ரியின் படத்துக்கு பணியாற்றியபோது, உணவு இடைவேளையில் அவரது ஆர்மோனியத்தை எடுத்து வாசித்திருக்கிறார் தஷி. அதைப் பார்த்துவிட்ட சலீல் சவுத்ரி, மறுநாள் அழைத்திருக்கிறார். பயந்துகொண்டே போனவரிடம், புதிய ஆர்மோனியப் பெட்டியைக் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார் சலீல். இன்றுவரை அந்த ஆர்மோனியத்தில்தான் இசைப்பணிகளைச் செய்கிறார் தஷி.
ஆர்.சி.சக்தி இயக்கிய ‘தாலிதானம்’ படத்துக்கு மார்க்கிங் பணி செய்தபோது, ‘படவா நீ நல்லா வருவே’ என்று பாராட்டியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
கார்த்திக் கார்டனில் நடந்த ஒலிப்பதிவுக்கு, சைக்கிள் மிதித்து வந்த களைப்போடும், வியர்வை முகத்தோடும் வந்துசேர்ந்த தஷியை ஒருமாதிரி பார்த்த லக்ஷ்மிகாந்த் – பியாரிலால், ஒரு ரீலுக்கு இவர் குறிப்பெடுத்த மார்க்கிங்கைப் பார்த்து, தோள்தட்டி பாராட்டியிருக்கிறார்கள்.
புகழேந்தியின் மேற்பார்வையில் இசைச்சேர்ப்பு நடத்தும் கே.வி.மகாதேவனுக்கு தபேலா மைக்கேல் மூலம் ஒரு படத்துக்குப் பணியாற்றி பாராட்டுகளை அள்ளியிருக்கிறார் இவர்.
இசையமைப்பாளர் சங்கத்திலிருந்து ‘கோல்டன் ஜூபிளி’ விருது வாங்கியிருக்கும் இவருக்கு, உலக பெண்கள் அமைப்பு ‘இசை அரசர்’ பட்டத்தை வழங்கியிருக்கிறது.
‘கருவறை’, ‘தீ விலங்கு’, ‘பயணங்கள் தொடரும்’, ‘காதல் தோழி’, ‘சங்கர் ஊர் ராஜபாளையம்’, ‘சக்ரவர்த்தி திருமகன்’. ‘ஒத்த வீடு’, ‘என் பெயர் குமாரசாமி’, ‘ஒளடதம்’, ‘அலையாத்தி காடு’, ‘அஸ்திரம்’, ‘பாதசாரிகள்’, ‘கல் பாலம்’, ‘நுகம்’, ‘பயம்’, ‘நீதான் ராஜா’, ‘‘படை சூழ வா’, ‘‘நானாக நானில்லை’, ‘அபூர்வ மகான்’ என வீ.தஷி பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.