ஒரு கட்சியினர் அரசியல் எதிர்ப்பை காட்டுவதற்கு கருப்பு கொடி காட்டுவது, GO BACK என்று சொல்லுவது, ஒழிக ஒழிக என்று கோஷம் எழுப்புவது இதெல்லாம் சகஜம். இதே எதிர்ப்புமுறை அந்தக் கட்சியினருக்கு திரும்புவதும் சகஜம்.
ஆனால் இந்த ஆழ்ந்த இரங்கல் என்ற எதிர்ப்பு பதிவு அப்படி பார்த்து விட முடியாது. இன்று இது திரு. அண்ணாமலை அவர்களின் நடை பயணத்திற்கு எதிரானதாக இருக்கலாம். இதே போல் நாளை வேறு ஒரு தலைவரின் நடை பயணத்திற்கு இதே வாசகம் திரும்பினால் பரவாயில்லை. ஆனால் நாளை ஒரு தலைவரின் பிறந்தநாளுக்கோ அல்லது ஒரு கட்சிப்பிரமுகரின் திருமண விழாவிற்கோ வேறு குடும்ப விழாவிற்கோ இதே ஆழ்ந்த இரங்கல் என்ற துக்ககரமான வார்த்தை எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து பொதுத்தலங்களில் பரவி வந்தால் ஒருவேளை அந்த அரசியல் தலைவரோ, பிரமுகரோ தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த வீட்டில் மனைவிமாரோ, தாயோ அல்லது மற்றவர்களோ ஒரு பிறந்த நாளின் போது, ஒரு நல்ல நாளின்போது இந்த மாதிரி லச்சக்கணக்கான ஆழ்ந்த இரங்கல் என்ற அபசகுண வார்த்தையை அவர்கள் பார்க்க நேர்கையில், அவர்களின் மனநிலையை எண்ணிப்பாருங்கள்! அதே சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெய்வ பக்தி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி விஷயங்கள் அவர்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும்!
தற்பொழுது பதிவிடுபவர்களுக்கு நாளை எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. கட்சி தலைமைக்குத் தான் நாளை மிகப் பெரிய பாதிப்பாக உருவாகும். கடவுள் நம்பிக்கை இருக்கோ, இல்லையோ, அறச்சொல் நாளை நமக்கே எதிர்ச் சொல்லாக மாறிவிடும் என்பது உண்மை! எதிர்ப்பை காட்ட எத்தனையோ வழி இருக்கிறது. தயவு செய்து இந்த அறச்சொல்லை தவிர்ப்போம்!
அரசியல்வாதிக்காக அல்ல அவர்களின் குடும்பத்திற்காக!
நன்றி! வாழ்வோம்! வாழ வைப்போம்!
—இயக்குனர் பேரரசு