சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘போர் தொழில்’. கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் E4 எக்ஸ்பிரிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
தமிழ் சினிமாவில் அடிக்கடி க்ரைம் த்ரில்லர் படங்கள் வெளியானபோதும் ஒரு சில படங்களே காலத்தை தாண்டியும் பேசப்படும் படங்களாக இருந்து வருகின்றன. சிகப்பு ரோஜாக்கள், டிக்டிக்டிக், தொடங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ராட்சசன் வரை சில படங்களை இந்த வரிசையில் சொல்லலாம். அப்படியானதொரு மிகச்சிறந்த மைல்ஸ்டோன் படமாக வெளியாகிருக்கும் போர்ட் தொழில் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரே மாதிரியாக பெண்கள் கொலை செய்யப்பட, தடயங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு காவல்துறை அதிகாரியாக அனுபவம் மிக்க சரத்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக, படித்து முடித்துவிட்டு, டி.எஸ்.பி-யாக பொறுப்பேற்றிருக்கும் அசோக் செல்வன், பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இவர்கள் டீம் கொலையாளியை கண்டுபிடித்ததா? கொலைகளுக்கான காரணம் என்ன என்பவற்றை மிகச்சிறந்த திரைக்கதை மூலம், நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.
தன்னுடைய திரைத்துறை அனுபவத்தை அப்படியே, அனுபவம் மிக்க காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்துள்ளார் சரத்குமார். அவருடைய ஒவ்வொரு நகர்விலும் திறமையும் அனுபவமும் பளிச்சிடுகிறது. இளம் காவல்துறை அதிகாரியாக அனுபவம் இன்றி திண்டாடுவது, தன்னுடைய புத்தக அறிவைகாட்டி மிஞ்ச நினைப்பது என மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் அசோக் செல்வன். காவல்துறை ட்ரைவராக வரும் தேனப்பன், நாயகி நிகிலா விமல் என அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். திரைக்கதை மற்றும் வசன்ங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம், இது போன்ற கதைகளுக்கு பின்னணி இசை என்பது வில்லனுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை உணர்ந்து, வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பின்னணி இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய். ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு மற்றும் கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்துக்கும், பயணத்துக்கும் உறுதுணையாக அமைதுள்ளன. ஒரு மிகச்சிறந்த க்ரைம் த்ரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறது போர் தொழில்
போர் தொழில் – திரில்லர் அனுபவம்