தலைக்கூத்தல் திரை விமர்சனம்
லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, வசுந்த்ரா, கதிர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தலைக்கூத்தல். தமிழ்நாட்டின் தென் மாவடங்களில் முதியவர்களுக்கு நடக்கும் ஒரு விதமான கருணைக்கொலையே தலைக்கூத்தல் என்னும் சடங்கு. தலைக்கூத்தல் சடங்கு குறித்த ஒரு சில படங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும், இப்படம் அனுகிய முறை மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது.
மேஸ்திரியாக வேலை பார்த்து வரும் முத்து, தவறி விழுநத்தனால் கோமா நிலைக்கு சென்றுவிட, அவரது மகனான பழனி, தன் தந்தையை உடனிருந்து பார்த்துக்கொள்வதற்காக, தான் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு, இரவுக்காவலர் பணிக்கு செல்கிறார். பகல் முழுவதும் தன் தந்தையை கவனித்துக்கொள்வது, இரவில் கண்விழித்து பணி செய்வது என தன் தந்தைக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் உழைக்கிறார். குடும்பத்தினர் மற்றும் ஊர்காரர்கள் என அனைவரும், டாக்டர்களே கைவிட்ட முத்துவை தலைக்கூத்தல் சடங்கை செய்து கருணைக்கொலை செய்துவிடும்படி சொல்ல, அதை மறுத்து மருகும் பழனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
சமுத்திரக்கனி தன் திரைப்பயணத்தில் பல நல்ல வேடங்கள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் என பல ரோல்களை செய்திருக்கிறார் ஆயினும் தலைக்கூத்தல் படத்தில் வரும் பழனி கதாபாத்திரம், சமுத்திரக்கனியின் வாழ்நாள் சாதனை கதாபாத்திரம். நிச்சயமாக இவருக்கு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் காத்திருக்கின்றன. படம் தொடங்கும் போது நம் கண்களுக்கு சமுத்திரக்கனியாக தெரிந்தவர் பிறகு முற்றிலுமாக பழனியாகவே மாறிவிடுகிறார், படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும் பழனி என்ற பாத்திரம் நம் மனதுக்குள் புகுந்து குடைந்து கொண்டே இருக்கிறது. சமுத்திரக்கனியின் மனைவி பாத்திரத்தில் நடித்திருகும் வசுந்தரா தெற்கத்தி பெண் கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். பார்வையிலேயே பல்வேறு உணர்ச்சிகளையும் கடத்துகிறார். இளம் வயது சமுத்திரக்கனியாக வரும் கதிர், இளமைத்துள்ளுடன் நடித்திருக்கிறார். கதிருக்கும் கதா நந்திக்கும் இடையேயான காதல் காட்சிகள் மனதை கொள்ளை கொள்கின்றன.
படத்தின் திரைக்கதை, அனுகுமுறை ஆகியவற்றில் புதுமையை புகுத்தி இருக்கும் இயக்குனரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். படம் பார்த்துவிட்டு வந்த பல நாட்களுக்கு, படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் மனதுக்குள் சுழன்றுகொண்டே இருப்பதெல்லாம் சமீபகாலங்களில் வெளிவரும் திரைப்படங்கள் ஏற்படுத்தாத நிலையில், அந்த ஒரு மிகப்பெரிய மேஜிக்கை செய்திருக்கிறார் இயக்குனர். மனதை வருடும் இசை, கதையுடனும், கதை நடக்கும் களத்துடனும் பின்னிப்பிணைந்த கேமிரா என ஒரு முழுமையான உணர்வை நமக்குள் கடத்தி இருக்கிறது தலைக்கூத்தல்.
தலைக்கூத்தல்: தலைசிறந்த படைப்பு