மனிதனை மனிதனாக மட்டுமே பாருங்கள், ஏற்றத்தாழ்வுகள் வேண்டாம் என்று பொட்டில் அடித்தது போல் சொல்லும் படம்தான் நெஞ்சுக்கு நீதி. 2019ம் ஆண்டு ஆர்டிகிள் 15 என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கம் என்ற போதிலும் முற்றிலும் புதிய தமிழ் படம் போலவே உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
வெளிநாட்டில் படித்துவிட்டு தமிழ்நாடு காவல் துறையில் வேலைக்குச் சேரும் உதயநிதிக்கு இங்கு நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் எளிதில் பிடிபடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை களைய அவர் முற்படும்போது உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை அதிகாரிகள் வரை முட்டுக்கட்டை போடுகிறார்கள். அவற்றையெல்லாம் தாண்டி எப்படி பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக போராடுகிறார் என்பதே கதை.
அதிக பட்சம் காமெடிப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் உதயநிதிக்கு இப்படம் புதியதோர் பரிமாணம். தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி மிக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் உதயநிதி.
உதயநிதியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரனுக்கு அவ்வளவாக ரோல் இல்லை, உதயநிதியை தாண்டி மனதில் பதியும் கதாபாத்திரம் ஆரியுடையது. கதாபாத்திரம் மற்றும் ஆரியின் நடிப்பு இரண்டுமே சிறப்பு.
படத்தின் மற்றொரு ஆகச்சிறந்த பலம் வசனங்கள். படத்துக்கு மட்டுமல்லாமல் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்கும் உரமூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன அருண்ராஜா காமராஜின் எழுத்துக்கள்.
முன்னாள் முதல்வரும், மிகச்சிறந்த எழுத்தாளரும் உதயநிதியின் தாத்தாவுமான கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய புகழ்பெற்ற புத்தகமான நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பை இப்படத்துக்கு வைத்திருப்பது மிகப்பொருத்தம் மற்றும் பலம்.
படத்தின் வகைக்கேற்ற மிகச்சிறப்பான கேமிரா, மிரட்டும் இசை என டெக்னிக்கல் சங்கதிகல் படத்துக்கு உதவியிருக்கின்றன. முதல் பாதியில் சற்று தொய்வு இருப்பது உண்மைதான் என்றாலும் இரண்டாம் பாதி அதை சமன் செய்து விடுகிறது.
நெஞ்சுக்கு நீதி சமூகநீதி