27.01.2023
இரங்கல் அறிக்கை
மறக்க முடியாத மாமனிதர் ஜூடோ ரத்தினம்….
தென்னிந்திய நடிகர் சங்க ஆயுள் உறுப்பினராகவும், திரைப்பட முன்னணி சண்டை பயிற்சியாளராகவும் இருந்து பல்வேறு சாதனைகள் படைத்த ஜூடோ கே.கே.ரத்தினம் (95), அவர்கள் வேலூரில் 26.1.2023 அன்று மாலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
அமரர் ஜூடோ கே.கே.ரத்தினம் தன் இளம் வயதிலிருந்தே சிலம்பு , கத்தி மற்றும் வாள் சண்டை போன்ற கலையில் ஆர்வம் கொண்டு சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்று தமிழ் மட்டுமின்றி, இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என இந்திய திரையுலகில் சுமார் 1,500 திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர், மூன்று தலைமுறைகளை கண்டவர். திரையுலகில் சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு தனி முத்திரைப் பதித்து யாருமே சாதித்திராத சாதனைகள் பல புரிந்தவர் இதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். திரைத்துறையில் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர் .
அவருடைய மறைவு திரைப்படத்துறையில் ஒரு ஈடுக்கட்ட முடியாத மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் திரைப்பட உலகினருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம்
(M.நாசர்)
தலைவர்
அமரர் ஜூடோ கே.கே.ரத்தினம் பூதஉடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பொருளாளர் திரு.SI.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சிS.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் திரு.மனோபாலா, திரு.தளபதி தினேஷ் மற்றும் திரு.M.A.பிரகாஷ் ஆகியோர்கள் நேரில் சென்று மாலையிட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்