லீலை, கொலைகாரன் ஆகிய படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, லைலா, புதுமுக நாயகி சஞ்சனா ஆகியோர் நடிப்பில், அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் இணைய தொடர் வதந்தி. பிரபல இயக்குனர் இணையர் புஷ்கர் காயத்திரி இத்தொடரை தயாரித்துள்ளனர்.
கன்யாகுமரி பகுதியில் வெலோனி என்ற இளம்பெண் கொலை செய்யப்படுகிறார். அக்கொலையை காவல்துறையினர் விசாரிக்க, விசாரிக்க பல்வேறு மர்மங்கள், எதிர்பாராத குழப்பங்கள் ஏற்படுகிறது. அதைத்தாண்டி இறந்த பெண் குறித்து காட்டுத்தீ போல வதந்தி ஏற்படுகிறது. இறுதியில் அந்த பெண் கொலைக்கு காரணத்தை போலீஸ் கண்டறிந்தனரா என்பதே வதந்தி படத்தின் கதை.
எட்டு எபிசோட் கொண்ட இத்தொடரில் ஒவ்வொரு பாகத்திலும் மர்மங்கள் மற்றும் குழப்பங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பது ரசிகர்களின் பிபியை கூட்டிக்கொண்டே செல்கிறது. ரசிகர்களின் ஆர்வம் ஒரு சதவீதம் கூட குறையாமல் பார்த்துக்கொண்டதே படத்தின் மிகப்பெரிய பலம். அதே போல் துளியும் எதார்த்தம் குறையாமல், சினிமாத்தனம் இல்லாமல் இருப்பது பாராட்டுக்குறியது.
கன்யாகுமாரி வட்டார வழக்கு தமிழ் சினிமாவுக்கு புதியதல்ல என்றாலும் இவ்வளவு ராவாக, ஒரிஜினலாக வந்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குனர் கட்டமைத்திருக்கும் இந்தக் கதைக்களத்துக்குள் நம்மை இழுத்துச்சென்று கட்டிப்போட்டிருக்கிறார் என்பதே உண்மை.
எஸ்.ஜே சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சம்பிரதாயமாக இருக்கும், ஆனால் சொல்லிப் பாராட்டியாக வேண்டியது நம் கடமை. கனியாகுமரி பகுதியில் இருகும் ஒரு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாத்தித்துக்குள் தன்னை புகுத்திக்கொண்டுள்ளார். ஐந்தாவது பாகத்தில் ஒரு சிங்கிள் ஷாட்டில் அவர் பேசும் வசனம் எக்ஸ்டார்டினர் ரகம், தியேட்டராக இருந்திருந்தால் ரசிகர்களின் விசில் பறந்திருக்கும். லைலா, இதுவரை அவர் நடித்த பாத்திரங்களில் இது மாறு பட்ட கதாபாத்திரம். வெலோனி பாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனாவுக்கு இதுதான் முதல் நடிப்பு அனுபவம் என்று சொன்னால் நம்ப முடியாது. மிகச்சிறப்பான நடிப்பு. நாசர், ஹரீஸ் பேரடி, விவேக் பிரசன்னா ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.
உருத்தாத இசை, படத்தோடு இணைந்து பயணிக்கும் கேமிரா, த்ரில்லர் படத்துக்கு ஏற்றாற்போன்ற நறுக்கென்ற எடிட்டிங் என தரமான தொடராக வெளியாகி இருக்கிறது வதந்தி.
வதந்தி : சிலீர் அனுபவம்