கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா கேளிக்கை சங்கம் ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இலவச வகுப்புகளை அறிவித்துள்ளது. இதன்படி திரைப்படத் திருவிழாவின் போது, நவம்பர் 21- 28 வரையிலான எட்டு நாட்களுக்கு, ஆட்டிசம் பாதிப்புள்ளவர்களுக்கு திறன்பேசி வாயிலான திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படை வகுப்பும், சக்கர நாற்காலியின் உதவி தேவைப்படுவோருக்கு திரை நடிப்பில் அடிப்படை வகுப்பும் அளிக்கப்படும்.
அனைத்து தரப்பு மக்களும் கலை உருவாக்கமுறையை அணுகக்கூடிய வகையில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், திரைப்படம் என்ற மாயாஜாலத்தில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பதற்காக பல்வேறு வகுப்புகளை வழங்கி வருகிறது.
திறன்பேசி திரைப்பட உருவாக்க வகுப்பு, காட்சி தொடர்பியல் துறை நிபுணரான புகழ்பெற்ற திரு அஜ்மல் ஜாமியால் கையாளப்படும். இந்த வகுப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கும், இதற்கு விண்ணப்பிக்கவும், https://www.ftii.ac.in/p/vtwa/basic-course-in-smartphone-film-making-21st-28th-november-2022-for-individuals-suffering-from-autism-in-goa என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பைத் தொடர்பு கொள்ளலாம்.
சக்கர நாற்காலி தேவைப்படுபவர்களுக்கான திரை நடிப்பு குறித்த அடிப்படை பாடம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணை பேராசிரியர் திரு ஜிஜாய் பி.ஆர்-ஆல் கற்பிக்கப்படும். https://www.ftii.ac.in/p/vtwa/basic-course-in-screen-acting-21st-to-28th-november-2022-for-individuals-on-wheelchair-in-goa என்ற இணைப்பில் இந்த வகுப்பிற்கு பதிவு செய்யலாம்.