Friday, November 15, 2024
Home Uncategorized அன்றும் இன்றும் "சொல்ல மறந்த கதை" தங்கர் பச்சான் 04.11.2022

அன்றும் இன்றும் “சொல்ல மறந்த கதை” தங்கர் பச்சான் 04.11.2022

“சொல்ல மறந்த கதை” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகின்றன. 2002 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான போது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினார்கள். தங்கள் வீட்டு கதையாகவும், பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு கதையாகவும், நண்பர்களின் கதையாகவும், உறவினர்களின் கதையாகவும் இருந்ததுதான் அப்படத்தின் தனிச்சிறப்பு. சிறந்த இயக்குநராக அறியப்பட்ட சேரன் நடிகராக அறிமுகமானார். அன்று ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடித் தீர்த்த “சொல்ல மறந்த கதை”யை இப்பொழுதும் இன்றைய தலைமுறையினரும் கொண்டாடி மகிழ்கின்றனர்!

20 ஆண்டுகளுக்கு முன் ஒரு படைப்பாளனாக அப்படத்தைப் பார்த்த நான் மீண்டும் இன்று ஒரு சராசரி பார்வையாளனாகக் கண்டேன். காட்சிக்குக் காட்சி எத்தனை விதமான உணர்வுகள், உணர்ச்சிகள், பாத்திரப்படைப்புகள், உரையாடல்கள் என கண்களைத் திரையில் இருந்து விலகிக் கொள்ளாதபடி என்னைக் கட்டுண்டு வைத்துவிட்டது. கண்களில் இருந்து கசிந்த கண்ணீர் இறுதிவரை நிற்கவேயில்லை!

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” புதினத்தை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போதெல்லாம் எவ்வாறு உணர்ச்சி பொங்கப்பொங்க அழுது அழுது வாசித்தேனோ, அதே போன்ற உணர்வுடன் தான் திரைக்கதை எழுதும் போதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல் அழுது கொண்டே எழுதினேன்! அவ்வாறேதான் ஒவ்வொரு காட்சியையும் பிலிம் சுருளில் பதிவு செய்யும் பொழுதும் கேமிராவில் ஒற்றை கண்ணினால் பார்த்தபடியே கண்ணீரோடு படமாக்கினேன்! 20 ஆண்டுகள் உருண்டோடிய பின்னும் இப்படத்தை இப்பொழுது கண்டபோது ‘சிவதாணு- பார்வதி-சொக்கலிங்கம்’ வாழ்க்கையிலிருந்து வெளியேற முடியவில்லை!

நமது மண் சார்ந்த, மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட, பண்பாடு மற்றும் உறவு நிலைகளை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்ததால்தான் அது மக்களின் மனதில் ஆழமாக குடி கொண்டு விட்டது என்பதை உணர்ந்தேன். இவ்வாறான அசல் தமிழ்த் திரைப்படங்களைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்!

ஒரு படைப்பாளனாக மக்கள் எதிர்பார்க்கும் இது போன்ற திரைப்படத்தை உருவாக்கும் எண்ணமும் உந்துதலும் என்னை மேலும் ஆட்கொண்டு விட்டன! என் மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் இவ்வேளையில் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். நான் தற்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் மூலமாக உங்கள் அனைவரின் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றேன்! மிக்க நன்றி!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments