இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சர்தார். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் மிக முக்கிய பிரச்சினைகளை, அதன் அடி வேர்வரை ஆய்வு செய்து, மிகச்சிறந்த படமாக கொடுபது மித்ரன் அவர்களின் வழக்கம், அதன்படி சர்தார் படத்திலும் இந்தியாவின் தலையாய பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டு அதை தன்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறார்.
தற்காக சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் அதீத ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரி விஜய் பிரகாஷ் என்ற பாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து என்ப்போதும் தன் மீது புகழ் வெளிச்சம் படும்படி பார்த்துக்கொள்ளும் அவர், உளவுத்துறை கோப்புகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட லைலாவை கண்டுபிடித்தால் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகலாம் என்று தேடிச்செல்கிறார். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், தன் தந்தையான கார்த்திமீது தேசதுரோக முத்திரை குத்தப்பட்டதை அறிகிறார். எதையும் ட்ரெண்ட் செய்யும் கார்த்தி தன் தந்தை கார்த்தியின் பழியை துடைத்தாரா என்பதே சர்தார் படத்தின் கதை.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போல், ஒரே நாடு ஒரே தண்ணீர் குழாய் என்ற வகையில் தனியார் மயமாக்கப்படும் தண்ணீரால் இந்தியா எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கும் என்பதை பக்காவாக உணர்த்தி இருக்கிறார். தென்னாப்பிரிகா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு விசயங்களை காட்டி இருப்பது மிகச்சிறப்பான பதிவு. இரும்புத்திரை படம் பார்த்தபோது, எலெக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை பட்டியலிட்டதுபோல், தண்ணீர் தனியார் மயமாவதில் உள்ளா மாபெரும் பேரிடரை சுட்டிக்காட்டியுள்ளார். இது ஏதோ ஒரு திரைப்படம் என்று கடந்து போய்விடமுடியாத அளவும் மனதில் பாதிப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது சர்தார்.
இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார் கார்த்தி, ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் என இரு நாயகிகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் ரஜிஷா விஜயன் ராஷிகண்ணாவை ஓவர் டேக் செய்துவிடுகிறார். 90ஸ் கிட்ஸ்களின் ஏஞ்சல் லைலாவை சமூகப்போராளியாக காட்டி இருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி, சிறப்பாகவும் இருக்கிறது.
ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு மற்றும் ஜிவி பிரகாஷின் இசை ஆகியவை படத்துக்குக்கு மிகப்பெரிய பலம். குறிப்பிட்டு பாராட்ட வேண்டியது திலீப் சுப்பராயன் அவர்களின் சண்டை காட்சிகள். வசனங்கள் கூர்திட்டப்பட்ட கத்தி போல் இருக்கின்றன.
சர்தார்: அதிரடி சரவெடி