Friday, November 15, 2024
Home Uncategorized நடிகர் சிவகுமார் அவர்கள் வீட்டில் ஒரு புதிய ஆனந்த அனுபவம்.

நடிகர் சிவகுமார் அவர்கள் வீட்டில் ஒரு புதிய ஆனந்த அனுபவம்.

100 திருக்குறள்
அதற்கு அடையாளமாக வாழ்ந்த நூறு மனிதர்கள்.

சிவகுமார் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த சரித்திரங்கள் என்று மூன்று மணி நேரம் அவர் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சிவகுமார் அவர்கள் ஆற்றிய அற்புதமான உரையை அவரது வீட்டில் அவரோடு அமர்ந்து பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு.

நடிகர் சிவகுமார் அவர்கள் வீட்டில் நேற்று 17.10.2022 பிற்பகல் 3.00 மணிக்கு, அருமை நண்பர் மரபின்மைந்தன் முத்தையா, வெற்றித் தமிழர் பேரவையின் பெருமைக்குரிய தோழர்கள் குமார், வெங்கடேசன்,
நடிகர் ராஜேஷ், கவிஞர் நெல்லை ஜெயந்தா, ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன்.

ஒரு சிறிய குறிப்பு கூட இல்லாமல் மூன்று மணி நேரம் நடிகர்கள், தலைவர்கள், ஊரில் வாழ்ந்த உன்னத மனிதர்கள் நட்பின் அடையாளமாக வாழ்ந்த தலைவர்கள் என்று தொடர்ந்து பேசி ஒவ்வொரு நபரோடும், நிகழ்வோடும் ஒரு திருக்குறளை தொடர்பு படுத்தி சொன்ன விதம், அற்புதம் என்ற ஒற்றைச் சொல்லில் அடக்க முடியாத பெரும் பிரவாகம்.

திருக்குறளை உயர்ந்த மனிதர்களின் வாழ்வோடு விளக்கும் வரலாற்று உரை.

சிவகுமார் என்றால் நடிப்பைத் தாண்டி நல்லொழுக்கம்,
நேரம் தவறாமை ஒழுங்கமைப்பு, என அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்த நிகழ்வு.

காந்தியடிகள், நெல்சன் மண்டேலா, காமராசர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஓமந்தூரார், சில்வர் டங் சாஸ்திரி, போன்ற பெரிய மனிதர்களை மட்டுமல்ல சிவகுமார், சூர்யா, அவர்களிடம் 5000 பரிசுத்தொகை பெற்ற ஏழை மாணவன் ஏற்புரையில் இது தனக்கு அதிகம் என்றும் இந்தத் தொகையை தன்னோடு படிக்கும் ஏழை மாணவிகள் கிழிந்த ஆடையில் வருகிறார்கள் அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பேன் என்று கூறிய நிகழ்வையும் பகிர்ந்து நெகிழச் செய்கிறார்.

முடிவில் துப்புறவுத் தொழிலாளர்களின் நிலையைக்கூறி சக மனிதன் சாக்கடைக்குள் மரணிக்கும் அவலம் தீர வேண்டும் என வலியுறுத்தி அப்போது தான் திருக்குறளை மதிக்கிறோம், வள்ளுவரை வணங்குகிறோம் என்று அர்த்தம் என்று கூறி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் …” என்ற குறளோடு நிறைவு செய்த போது நமது இதயமும் கசிந்தது.

திருக்குறளை மட்டுமல்ல,
வாழ்வாங்கு வாழ்ந்த பெருமைக்குரிய மனிதர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை திருக்குறளின் பொருளோடு அறிய இந்த உரையை தமிழ் இளைஞர்கள் அனைவரும் அவசியம் கேட்க வேண்டும்.

அந்த உரை புத்கமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் படிக்கும் வகையில் விருப்பப் பாடநூலாக சேர்க்க வேண்டிய நூல்.

திருக்குறளை புதிய வழியில் இளைஞர்களுக்கு சேர்க்கும் மதிப்புமிகு சிவகுமார் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

அன்புடன்,
அ. முகமது ஜியாவுதீன்.
மேனாள் மாவட்ட நீதிபதி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments