Friday, November 15, 2024
Home Uncategorized தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்.!

தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்.!

ஆளுநரே..!
தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்.!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India – PFI) என்பது இன்றைக்கு தேசிய அளவில் இருக்கும் அமைப்புகளில் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிகக் கண்ணியமானதாகவும், ஒழுக்கமானதாகவும், படித்தவர்கள் மிக அதிகமானோர் பங்கேற்றிருக்கும் ஒரு முற்று முழுவான தொண்டு அமைப்பாகும்.
உலகமே கொரோனா நோயின் கொடிய அச்சுறுத்தலில் இருந்த போது, அன்றைய சூழலில் உயிரிழந்தவர்களின் உடலை யாருமே தொட முன்வராத சூழலில், பெற்ற தாயை, சொந்த தந்தையைக் கூட யாரும் தொடாத நிலையில் களத்தில் இறங்கி நின்று மிக மரியாதையாக அடக்கம் செய்ததில் இந்த அமைப்புக்கும் முக்கிய பங்கு உள்ளது.
இது மட்டுமல்லாது வெயிலாக இருக்கட்டும், மழையாக இருக்கட்டும்., வெள்ளக் காலங்கள் போன்ற பேரிடர் நெருக்கடிகளில் மக்கள் துயரங்களில் துவண்டு கிடந்த போதெல்லாம், ஒரு தோழனாக உடன் நின்று களப் பணியாற்றிய தூய தொண்டர்களை உள்ளடக்கிய பேரமைப்பே அது.
இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நின்று வலுவாகப் போராடக் கூடிய மிக முக்கியமான அமைப்பாக அது விளங்குகிறது. அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தமிழ்நாட்டில் பாசிசத்தையும், வெறுப்புணர்வையும், மத அரசியலை விதைக்கும் முகமாகவே ஆளுநர் ரவி அவர்கள், PFI-யின் மீது பொய்யான தகவல்களை சொல்லியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.,வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, PFI குறித்த ஒரு ஆடியோவை வெளியிட்டார். அந்த ஆடியோவிலும் ஆளுநர் ரவியின் கருத்தையே குறிப்பிட்டிருந்தார். அவர் ஏற்கனவே காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். எனவே, எதைச் செய்தால் எது நடக்கும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும். அதனால் தான், திட்டமிட்டு தான் பேசிய ஆடியோவை அவரே ரகசியமாக கசியவிட்டார். அதன் மூலம் விஷ விதையை தமிழகத்தில் விதைத்திருந்தார்.
அதன் நீட்சியாகவே தமிழக ஆளுநர் இன்று PFI அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஒரு அரசியல் கட்சித் தலைவரான அண்ணாமலையை விட ஒரு படி மேலே போய், அரசின் நிர்வாகத்தில் பங்கெடுத்துள்ள, ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் ஆளுநர் இப்படிச் செய்வதென்பது அப்பதவிக்கு அழகானது அல்ல.! அதற்கு ஆளுநர் பா.ஜ., தலைவராகவோ, அல்லது ஆர்.எஸ்.எஸ்., தலைவராகவோ இருந்து சொல்லியிருந்தால், நமக்கொன்றும் வியப்பு ஏற்பட்டிருக்காது.
ஏற்கனவே, எழுவர் விடுதலையாக இருக்கட்டும், நீட் விலக்கு மசோதாவாக இருக்கட்டும் இதற்கெல்லாம் ஒப்புதல் தராமல் தமிழக அரசும், தமிழக மக்களும் வைத்த கோரிக்கைகளை கிடப்பில் போட்டு தன் கடமையைக் கூட செய்ய முன் வராத ஆளுநர், இப்போது தனக்குத் தொடர்பில்லாத விசயங்களில் தலையிட்டு தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்க நினைக்கிறார்.
உண்மையிலேயே PFI அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்குமேயானால், உலகின் எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு கொண்டிருக்குமேயானால் அதற்கான ஆதாரத்தை வெளியிடலாம். அரசாங்கத்தை, அதிகாரத்தை கையில் வைத்திருப்போர் துணிந்து அதைப் பொது வெளியில் வெளியிடலாமே.!
அதை விடுத்து, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மக்களிடையே குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் சொல் விளையாட்டு என்பது நல்லது அல்ல.! பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் செய்யக்கூடியதும் அல்ல.!
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரத்திற்கு வருபவர்கள், மக்களுக்கு எதிராகவே செயல்படுவதென்பது வாடிக்கையாகி வருவது வேதனைக்குரியது.
எனவே, இது மாதிரியான வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்.! என்ற கோரிக்கையை அன்போடு முன் வைக்கிறேன்.
அன்புடன்,

அமீர்
சென்னை
07.05.2022

(திருத்த அறிக்கை – முந்தைய அறிக்கையில் POPULAR FRONT OF INDIA என்பது, அதன் சார்பு அமைப்பான SDPI என்று தவறுதலாக குறிப்பிடப் பட்டிருந்தது. ஊடக நண்பர்கள், அதை மாற்றிப் பதிவிட கேட்டுக் கொள்கிறேன்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments