புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கி உலகநாயகன் கமல் உட்பட பலரும் திரைப்படமாக எடுக்க நினைத்த நாவல், கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன். தமிழ்த் திரையுலகின் ஐம்பது ஆண்டுகால தவம் இன்று இயக்குனர் மணிரத்னம் மூலம் நிறைவேறி இருக்கிறது.
உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களின் விருப்பத்துக்குரிய நாவல் பொன்னியின் செல்வன், இந்நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் நடைபெறுகிறது என்று செய்திகள் வரும்போதெல்லாம், அனைவரும் சொல்லும் ஒரே வாக்கியம், பொன்னியின் செல்வனை திரையில் காட்டுவது கடினம் என்பதே, ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி நாவலில் இருந்த அதே பிரம்மிப்பை திரையிலும் கொண்டுவந்துள்ளனர். நாவலை அப்படியே வரிக்கு வரி திரையில் கொண்டு வருவது முடியாது மேலும் சிறப்பாகவும் இருக்காது, எழுத்து மொழி வேறு, திரைமொழி வேறு. கல்கியின் பொன்னியின் செல்வனை சிறப்பாக திரைமொழிக்கு மாற்றியதற்காக இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு சிறப்பு பாராட்டு.
தெற்காசியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாமன்னர் இராஜராஜ சோழன் அவர்களின் இளமைக்காலத்தை சொல்லுவதுதான் பொன்னியின் செல்வன் புதினம். அதில் மிக முக்கியமான கரு, இராஜராஜ சோழனின் மூத்தவர் வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகாலன் கொலை, கதையின் மையச்சுழலான இதை நோக்கியே நகர்கிறது சோழதேசமும், திரையரங்கில் இருக்கும் ரசிகர்களின் மனதும். உலகநாயகன் கமல்ஹாசனின் உரையுடன் தொடங்கும் படம், பரபரவென அடுத்தடுத்த காட்சிகளில் நம்மை ஈர்த்துக்கொள்கிறது.
பொன்னியின் செல்வன் புதினத்தை படித்தவர்களின் கற்பனையில் பல உருவங்கள் வந்து போயிருகலாம் இனி எப்போதும் அருண்மொழி வர்மன் என்றதும் ஜெயம் ரவியின் உருவம்தான் மனக்கண்ணில் தோன்றும், இடைவேளைக்குப்பிறகு அறிமுக்க்காட்சி இருந்தாலும், படம் முடியும்போது அனைவரையும் தாண்டி மாமன்னர் ராஜராஜ சோழனின் இளமைக்கால அருண்மொழி வர்மனாக இனி என்றும் நம் நினைவில் ஜெயரம் ரவியே இருப்பார்.
பொன்னியின் செல்வன் என்றதுமே அனைவரின் உதடுகளும் உச்சரிக்கும் வார்த்தை ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’. கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மிக மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். ஆதித்த கரிகாலனாக அதகளம் செய்திருக்கிறார் விக்ரம். நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், என கல்கியின் கதாபாத்திரங்கள் திரையில் உலவுகின்றனர்.
ரஹ்மானின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம், அதே போல் ஜெயமோகனின் வசனங்கள். தோட்டா தரணியின் கலை இயக்கம், ரவிவர்மனின் ஒளிபதிவு என படத்துக்கு அனைத்து டெக்னிக்கல் விசயங்களும் மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கின்றன.
பொன்னியின் செல்வன்: திரையில் ஒரு சோழ மண்டலம்