சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்து காத்திருக்கும் காவல்துறையினருக்கு, பல ஆண்டுகாலம் முடிக்கப்படாமல் இருக்கும் வழக்குகளில் ஏதாவது ஒரு வழக்கை எடுத்து விசாரிக்க ஆணையிடுகிறார் காவல் துறை உயர் அதிகாரியான அஜய் ரத்னம். அதன்படி அனைத்து பயிற்சி காவல் அதிகாரிகளும் ஆளுக்கொரு வழக்கை தேடித்தேடி எடுத்துக்கொண்டிருக்க, அருள்நிதி கண்களை மூடிக்கொண்டு ஒரு வழக்கை தேர்ந்தெடுகிறார்.
உண்மையில் அவர் அந்த வழக்கை தேர்தெடுக்கவில்லை, அத்ந வழக்குதான் அவரை தேர்தெடுக்கிறது. அந்த வழக்கின் உள்ளே செல்லச்செல்ல அது ஒரு சாதாரண வழக்கல்ல, பல்வேறு முடிச்சுகள் கொண்ட, அமானுஷ்யங்கள் நிறைந்த வழக்கு என்பது தெரியவருகிறது. பிரச்சினைகள், சவால்கள், எதிர்பாராத அமானுஷ்யங்க என நீளும் அந்த வழக்கில் அவர் எடுத்த முயற்சிகள் பலன் தந்ததா எவ்வாறு அவ்வழக்கை முடித்தார் என்பதே டைரி படத்தின் கதை.
கதையில் முடிச்சுகள் இருக்கும் ஆனால் முடிச்சுகளுக்குள்தான் கதையே இருக்கிறது என்கிற ரீதியில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் இன்னாசி பாண்டியன். முதல் பாதி முழுக்க பல்வேறு முடிச்சுக்களை சொல்லிக்கொண்டே வரும் இயக்குனர், இரண்டாம் பாதியில் அந்த முடிச்சுகளை அவிழ்க்கும்போது கண்முன்னே ஒரு மாயாஜாலம் நிகழ்வது போன்ற ஒரு ஜாலத்தை ஏற்படுத்துகிறார். இதுவே இப்படத்தின் ஆகப்பெரிய பலம்.
அருள் நிதிக்கு இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றால் ஓன் க்ரண்டில் விளையாடுவதுபோல, மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படித்தி இருக்கிறார். நாயகி பவித்ரா மாரிமுத்துவுக்கு கொடுக்கப்பட்ட சிறிய பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார். காவல் துறை அதிகார் அஜய் ரத்னம், சாம், சாரா என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளனர்.
படத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டியது கலை இயக்குனரின் பணியைத்தான். சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் பழைய பேருந்து, தண்ணீரில் மூழ்க்கிக்கிடக்கும் பேருந்து என தத்ரூபமான கலைப்படைப்பாக கொடுத்திருக்கிறார். நீலகிரியின் அழகியல் காட்சிகள், பேருந்துகளுக்கிடையான குறுகிய சந்தில் பயணிக்கும் பரபரப்பான காட்சிகள் என அனைத்து காட்சிகளையும் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். இது போன்ற த்ரில்லர் படக்களுக்கான மிகச்சிறந்த படத்தொகுப்பு என அனைத்து டெக்னீசியன்களிடமும் மிகச்சரியாக வேலை வாங்கியுள்ளார் இயக்குனர். இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹனின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.
டைரி: தவிர்க்க முடியாக பக்கங்கள்