தனுஷ், நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தாத்தா சீனியர் திருச்சிற்றம்பலம் பாரதிராஜாவின் பேரன், ஜூனியர் திருச்சிற்றம்பலம் தனுஷ்.
ஃபுட் டெலிவரி செய்யும் வேலை செய்துவரும் தனுசுக்கும், காவல்துறை அதிகாரியான அவருடைய அப்பா பிரகாஷ்ராஜுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம், ஆனால் அவருடைய தாத்தா பாரதிராஜாவுக்கும், அவருடைய இளம் வயது தோழி நித்யா மேனனுக்கும், பழம் என்று அனைவராலும் அழைக்கப்படும் திருச்சிற்றம்பலம் தனுஷ் எப்போதும் ஸ்பெஷல்.
வாழ்க்கையில் எந்த பிடிப்பு லட்சியம் என்று எதுவும் இல்லாமல் திரிந்து கொண்டிருக்கும் தனுஷுக்கு இரண்டு பெண்கள் மீது காதல் வருகிறது. அந்த காதல்கள் என்னவானது அவருடைய வாழ்க்கை எந்த திசையில் பயணிக்கிறது என்பதே திருச்சிற்றம்பலம் படத்தின் கதை.
தனுஷைப் பொறுத்தவரை இந்த கதையின் களம் என்பது அவருடைய சொந்த தொகுதி என்பதுபோல, சிக்ஸர் சிக்ஸராக அடித்து விளாசி இருக்கிறார் தனுஷ்.
இயக்குனர் மித்ரன் ஜவஹரின் திரைக்கதை திறமையை பற்றி நாம் எதுவும் புதிதாக சொல்லத் தேவையில்லை, இப்படத்திலும் தன்னுடைய முழு திறமையும் பயன்படுத்தி மிகச் சிறந்த திரைக்கதை அமைத்திருக்கிறார். கிளைக்கதைகள், சிறிய வசனங்கள் உட்பட அனைத்திலும் மிகவும் கவனமாக ஒரு சிற்பி போல செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.
பெண்களே இல்லாத வீடு, பால்ய வயது தோழியுடனான நட்பு, நடுத்தர வர்க்கத்தின் சராசரி இளைஞனின் வாழ்க்கை போராட்டம் என படத்தின் கதையுடன் ரசிகர்கள் தங்களை கனெக்ட் செய்து கொள்வதாக இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு, தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. பாடல்கள் பின்னணி இசை என அனைத்திலும் கலக்கி இருக்கிறார் அனிருத். தேன்மொழி பாடலுக்கு தியேட்டர் அதிர்கிறது. தாய்க்கிழவி பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது.
ஆக மொத்தத்தில் ஒரு எளிமையான இனிமையான அருமையான படமாக இருக்கிறது தனுஷின் திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் நம்ம வீட்டு பையன்