தர்மம் செய்யுங்கள்: நடிகர்களுக்கு கே. ராஜன் வேண்டுகோள்!
சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!
‘செஞ்சி’ திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை!
சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’.
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் ‘செஞ்சி’.
இதை வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு உட்படாத வகையில் தனது விருப்பத்துக் கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக ‘செஞ்சி’ என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.
இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது,
”எனது மனதில் சினிமா கனவு இருந்தது. அந்தக் கனவை நிறைவேற்ற நான் எனது வாழ்க்கைக் கடமைகளை நிறைவேற்றிய பின் குடும்பத்தின், பிள்ளைகளின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் இதில் இறங்கினேன். அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்கு இரண்டு வருடம் நாங்கள் தேடி அலைந்தோம். அந்த அளவிற்கு ஒரு தேடலுடன் இதில் ஈடுபட்டோம். இதுவரை கேமரா போகாத பல இடங்களில் இந்தப் படத்திற்காக நாங்கள் பயணப்பட்டு படப் பதிவு செய்துள்ளோம். காலை 6 மணிக்கு கிளம்பி 2 மணி நேரம் மலையில் காடுகளில் என்று நடந்து 8 மணிக்குச் சென்றடைந்து, வனத்துறை அனுமதி கொடுத்த நேரமான காலை 11 மணி முதல் 3 மணி வரை படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நாங்கள் போன சில நிமிடங்களில் யானை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் சூழலில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வனத்துறை மிகவும் பாதுகாப்பாக உதவியாகவும் இருந்தது.
காட்டில் மட்டுமல்ல கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலும் எடுத்திருக்கிறோம் . பாண்டிச்சேரி, மலேசியா என்றும் பயணம் செய்து எடுத்துள்ளோம்
சினிமா நாடு, மொழி ஆகியவற்றுக்காக மட்டும் போராட வேண்டும் என்பதில்லை. இந்தப் பூமிக்காகவும் போராட வேண்டும் என்கிற கருத்து இதில் சொல்லப்பட்டுள்ளது. சினிமா என்பதை இரண்டாவது கல்வி என்று நான் நினைக்கிறேன்.
சினிமாவில் ஒரு சிறு விஷயம் வெளிப்படுத்தினாலும் கூட அது மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்
சினிமா மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக இதை எடுத்திருக்கிறேன். .
இதில் யார் நடிப்பது என்று பார்த்த போது பிரபல கதாநாயகர்கள் என்றால் நிபந்தனைகள் போடுவார்கள். அது சரிப்பட்டு வராது என்று நினைத்தேன். தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்றால் அதுவும் அப்படித்தான்,கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நானே நடித்து இயக்கித் தயாரித்தேன்.
நான் சினிமா எடுக்கும் விஷயத்தை அப்படியே குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டு அவர்கள் ஆதரவுடன் இந்தக் களத்தில் இறங்கினேன். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. இதில் நடித்திருக்கும் ரஷ்ய நடிகை கெசன்யா இரண்டு மாதம் வந்து தங்கியிருந்து அழகாக நடித்துக் கொடுத்தார்
இது வழக்கமான சினிமா போலிருக்காது. ஆக்சன் சென்டிமென்ட், போன்ற வியாபார நோக்கத்தில் இருக்காது .இவற்றையும் தாண்டி சினிமாவில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்றை எடுத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறேன்.அதே சமயம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையை வித்தியாசமான களத்தில் உருவாக்கி இருக்கிறோம். ஊடகங்கள் ஆதரித்து ஊக்கப்படுத்தி விட வேண்டும். ஏனென்றால் ஊடகங்கள் தான் விடியலுக்கான சூரியக் கதிர்கள் என்று நான் நம்புகிறேன். ஆதரவு தர வேண்டும்” என்று கூறினார்.
இயக்குநர் பேரரசு கூறும்போது,
” சினிமா எத்தனையோ பேரைப் பார்த்து இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்திசாலியை, கெட்டிக்காரத்தனம் உள்ளவரைப் பார்த்ததில்லை.
சினிமாக் கனவோடு வந்து திருமணமாகாமல் சிரமப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் சிரமப்பட்டு சம்பாதித்துக் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். இது புதிதாக இருக்கிறது. இப்படியும் சினிமாத்துறைக்கு வரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
செஞ்சி என்பது என்னுடைய தலைப்பு .அதைப் புதுப்பிக்காததால் இவர் எடுத்துக் கொண்டு விட்டார்.ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை அதன் தலைப்பைப் பார்த்தாலே அதில் உள்ள வடிவமைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும். இவர் செஞ்சி என்பதைச் சாதாரணமாக அந்தப் பெயரைப் போடாமல் அதில் மெனக்கட்டு செய்துள்ளார். நானும் ஊர்ப் பெயர்களில் படங்கள் எடுத்துள்ளேன்.
திருப்பாச்சியில் பழுக்கக் காய்ச்சிய அரிவாளை அந்தத் தலைப்பில் வைத்திருப்பேன். சிவகாசியில் பட்டாசை வைத்து வடிவமைத்திருப்பேன். திருண்ணாமலையில் லிங்கங்களாகக் காட்டி இருப்பேன். இவர் தலைப்பில் செஞ்சிக் கோட்டையை நினைவூட்டும்படி வடிவமைத்துள்ளார்.
செஞ்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று ஞாபகங்கள் தான். செஞ்சியின் அரசன் தேசிங்கு ராஜா கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவரை வீழ்த்த முடியாத போது அவர் சவாரி செய்த குதிரையை வீழ்த்தினால் அவரைக் கொன்று விடலாம் என்று எதிரிகள் நினைத்தார்கள். எனவே அவரது குதிரை நீலவேணியை வெட்டிச் சாயத்தார்கள் .பிறகு ராஜாவைக் கொன்றார்கள்.செஞ்சியில் மன்னருக்குச் சமாதி இருப்பது போலவே அவரது நண்பன் அகமத்கானுக்கும் அவர் சவாரி செய்த குதிரையான நிலவேணிக்கும் சமாதி உள்ளது .இதன்மூலம் விலங்குகளுக்கு வரலாற்றில் உள்ள இடத்தை நம்மால் அறிய முடியும்.
இந்தப் படத்தை அங்கே எடுத்துள்ளார்கள் .அந்தக் காட்சிகள் நன்றாக உள்ளன. இந்தப் படம் வெற்றிபெற்று செஞ்சியில் வெற்றிக் கொடியும் பறக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,
“நான் ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது பரபரப்பாக பேசுவதாகச் சொல்வதுண்டு. இப்போதெல்லாம் நான் பேசிவிட்டு வீடு செல்வதற்குள் யூடியூப் சேனல்களில் அது வந்து விடுகிறது.
நான் வாழ்த்தவும் செய்வேன். நல்ல காரியங்கள் செய்யும்போது வாழ்த்துவேன். தவறுகள் நடக்கும் போது சுட்டிக்காட்டுவேன். தவறுகளை சுட்டிக்காட்டி காட்டுவது தானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவது தர்மம்.
தவறான வழியில் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள் என்று நான் நடிகர்களை மட்டும் சொல்லவில்லை. லஞ்சம், ஊழல், மோசடிகள் செய்து தவறான வழிகளில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதை அனுபவிக்க முடியாமல் வெறும் காகிதக் குப்பைகளாக போட்டுவிட்டு செல்லும் பலருக்கும் நான் சொல்கிறேன். நீங்கள் கடவுளைத் தேடி கோவில் கோவிலாக அலைய வேண்டாம். அன்றாடம் சிரமப்படும் ஏழைகளைக் கண்டு அவர்களுக்கு உதவுங்கள் .அவர்கள் உங்களைக் கடவுளாக நினைப்பார்கள். தர்மம் செய்யுங்கள்.அலெக்சாண்டர் இறந்தபோது சவப்பெட்டியில் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு வெறுங்கையோடு தான் சென்றான். தர்மம் செய்யுங்கள்.
ரோட்டரி சங்கத்திலிருந்து நன்றாகச் சேவை செய்துவிட்டுத் தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஆனால் இங்கே பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்துவிட்டு ரோட்டோரத்திற்கு சென்றிருக்கிறார்கள். நடு ரோட்டுக்குச் சென்று இருக்கிறார்கள்.
நான் மாநகராட்சி பள்ளி ஆசிரியராக இருந்தவன். என்னை ஒருத்தர் ஏமாற்றி சினிமாவுக்கு இழுத்து விட்டார். 1983ல் பிரம்மச்சாரிகள் என்ற படம் எடுத்தேன். 7 லட்சம் செலவானது 5 லட்சம் இழப்பு, 2 லட்சம் கடன் .மொத்தமும் காலி. 1990-ல் நம்ம ஊரு மாரியம்மா என்ற படம் எடுத்தேன். சரத்குமாரை வில்லனாக நடிக்க வைத்தேன். அந்தப் படத்தில் லாபம் கிடைத்தது. பிறகு தங்கமான தங்கச்சி என்று சரத்குமாரை நாயகன் ஆக்கி படம் எடுத்தேன்.10 லட்சம் லாபம் கிடைத்தது.
பிரபுதேவா மீனாவை வைத்து டபுள்ஸ் படம் எடுத்து,75 லட்சம் இழப்பு வந்தது. பார்த்திபன், தேவயானியை வைத்து நினைக்காத நாளில்லை படம் எடுத்தேன்.ஒன்றே கால் கோடி இழப்பு.
இப்படி ஒன்பது படங்களை எடுத்தேன். நாலரைக் கோடி காலி.
சினிமா உலகம் நாணயம் இல்லாமல் இருக்கிறது .நான் இப்போது பைனான்ஸ் செய்து வருகிறேன். கொடுத்த பணத்தை வாங்குவதற்கு இழுத்தடிக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டிய சங்கத்தில் யார் இருக்கிறார்கள்?முதல் திருடனே தயாரிப்பாளர் சங்கத்தில்தான் இருக்கிறார். இதெல்லாம் சரியானால்தான் தான் சினிமா வளரும்.
தமிழ்ப் படங்கள் எல்லாம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கின்றன. இப்படி நடக்கும் தவறுகளை எல்லாம் நான் சுட்டிக்காட்டினால் என்னை விமர்சிக்கிறார்கள்.
நான் விஷாலை பல முறை விமர்சித்து இருக்கிறேன். லத்தி படத்தின் விழாவுக்காக விநியோகஸ்தர் சங்கத் தலைவர் என்கிற முறையில் என்னை அழைத்தார்கள். போனேன், அப்போது விஷாலை நான் பாராட்டிப் பேசினேன். அப்போது அவ்விழாவில் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளை விஷால் வழங்கினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிச் சமூகத்திற்கு நல்லது செய்யும் போது அவர்களை பாராட்டத் தானே வேண்டும்? விஷாலின் இப்போதைய போக்கு சரியாக உள்ளதாக நான் நம்புகிறேன் .அதனால் நான் அவரைப் பாராட்டினேன் அவர்கள் பெற்றோர்களுக்கெல்லாம் இத்தனை நாள் விமர்சனம் செய்து கொண்டிருந்தவர் பாராட்டுகிறார் என்று மகிழ்ந்தார்கள். தவறுகளை சுட்டிக்காட்டவும் நல்லது நடக்கும்போது பாராட்டவும் தயங்க மாட்டேன் .
தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவதுதானே தர்மம்?
இந்தப் படம் வெற்றிகரமான படமாக அமைய வேண்டும். கணேஷ் சந்திரசேகர் இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார்.
படத்தில் நடித்துள்ள ரஷ்ய நடிகை கெசன்யா பேசும்போது,
“இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்து இருந்தது.நான் இந்தப் படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது,
“இப்பதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது.
வெற்றிகரமான மூன்றாவது நாள்,
வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போடுகிறார்கள். ஒரு காலத்தில் வெற்றிகரமான 25வது நாள், 100வது நாள் ,125 வது நாள் 175 வது நாள் என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது. இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா என்று ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா என்றெல்லாம் போய் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமா என்று பேசுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட சூழலில் தான் இவர் இந்த செஞ்சி படத்தை உருவாக்கி இருக்கிறார் .நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அந்தப் படத்தைப் பற்றி, தயாரிப்பாளர் பற்றி, இயக்குநர் பற்றி விசாரிப்பேன். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள் .இவர் ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார்.அதே நேரத்தில் குடும்பத்தின் தொந்தரவுகள் இல்லாமல் எல்லாம் செட்டில் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார்.
இப்படிக் குடும்பத்தில் செட்டில் செய்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வர முடியும் என்று நினைத்தால் இங்கு யாருமே வரவே முடியாது. இவரது விடாமுயற்சி பாராட்டுக்குரியது.
ராஜன் சார் தன் வாழ்க்கைக் கதை முழுவதையும் கூறினார்.
இவ்வளவு இழப்பு என்று ஆன போதும் அதே நேரம் அவர் சினிமாவில் வட்டிக்கு விட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை.
இதிலிருந்து சினிமாவில் விழுந்தாலும் , முடிந்தால் எழவும் முடியும் என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கு ராஜன் தான் உதாரணம்.
இங்கே தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் சினிமாவில் நுழைவது என்று முடிவெடுத்தபோது அவர் மைத்துனர் கவலைப்பட்டதாக இங்கு பேசும்போது கூறினார். தனது தங்கையின் கணவர் இப்படி சினிமா என்று போவதில் பதற்றப்பட்டதாகச் சொன்னார். ஆயிரம் இருந்தாலும் தனது தங்கையின் வாழ்க்கை மீது அண்ணனுக்கு ஒரு அக்கறை இருக்கும் தானே? மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும் என்பார்கள். அந்த வகையில் கவலைப்பட்டு இருக்கிறார். இனி அவர்கள் தைரியமாக இருக்கலாம்.
படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு புதைக்கப்பட்ட புதையலை, பொக்கிஷத்தைத் தேடிப் பயணம் செல்வது போல் உள்ளது. இது பார்ப்பதற்குப் புதிதாக உள்ளது .இப்போது கூட கேரளாவில் பல கோயில்கள் திறக்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் அவ்வளவு பொக்கிஷங்கள் அங்கே இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் முத்து கணேஷ், எல். வைத்தியநாதன் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.எல்.வி என்பவர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர். அந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு வாழ்த்துகள். படத்திற்கான முக்கிய பாத்திரத்தில் இயக்குநரே நடித்துள்ளார் .தமிழ் சினிமாவில் பெரிய ஆள் சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை .படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் வரவேற்பார்கள். இந்த செஞ்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
இந்த விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஷிண்டே, இசையமைப்பாளர்கள் முத்து- கணேஷ் ,பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர் வைத்தியநாதன், மலேசியாவில் இருந்து வந்திருந்த தயாரிப்பாளரின் மைத்துனர் டத்தோ டாக்டர் கமலநாதன் , தயாரிப்பு நிர்வாகி தில்லை நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் தினேஷ் சந்திரசேகரின் மகன் அஸ்வின் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.