Friday, April 11, 2025
Home Uncategorized தமிழ் திரைப்பட துறையின் பிரச்சனைகளை தீர்க்க நமது சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து

தமிழ் திரைப்பட துறையின் பிரச்சனைகளை தீர்க்க நமது சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து

Ref: TFAPA/1087/2025 05.04.2025

பெறுநர்,
திரு.முரளி ராமசாமி,
திரு.கதிரேசன் /திரு. ராதாகிருஷ்ணன்
தலைவர் மற்றும் செயலாளர்கள்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
சென்னை – 600 006.

பொருள்: தமிழ் திரைப்பட துறையின் பிரச்சனைகளை தீர்க்க நமது சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து

வணக்கம்,

தமிழ் சினிமா கடந்த மூன்று மாதங்களில் 72 திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் 5 படங்கள் தவிர மற்ற அனைத்தும் தோல்வி படங்களே. பல திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களின் மொத்த முதலீட்டையும் இழந்து, அவர்களுக்கு எவரின் ஆதரவும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை காக்க, நமது இரு சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது இந்த கடுமையான சூழ்நிலையில் அவசியம்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை, நாங்கள் அனைவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் சேர்ந்து பல முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தான் கருதுகிறோமே தவிர, தனியாக நாங்கள் மட்டுமே அத்தகைய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று எப்போதும் கருதியதில்லை.

கீழ்கண்ட முக்கியமான விஷயங்களில் நம் இரு சங்கங்களும் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம்.

  1. தமிழ் சினிமா மறுசீரமைப்பு திட்டங்களை (Reformation) முடிவு செய்து அனைத்து சங்கங்களுடன் (நடிகர் சங்கம் உட்பட) இணைந்து அமுல்படுத்தல் – அதன் மூலம் தயாரிப்பளர்களின் செலவுகளை கட்டுப்படுத்துதல்.
  2. மலையாள சினிமா துறை போல VPF கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுப்பது.
  3. திரைப்பட வெளியீட்டில் ஒழுங்குமுறையை (Release Regulation) கொண்டுவந்து, சிறு பட்ஜெட் படங்களுக்கும் சரியான வெளியீடும், வருமானமும் கிடைக்க வழி செய்தல்.
  4. பைரஸி இன்றைக்கு மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவை அழித்து வருகிறது. அதை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள்.
  5. நமது தயாரிப்பாளர்களின் திரைப்படங்களின் டிஜிட்டல்/OTT வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க தேவைப்படும் முயற்சிகள்.
  6. FEFSI-யுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பில் செலவுகளை குறைக்கும் வழிமுறைகளை உண்டாக்குதல் – இதன் காரணமாகவே, FEFSI-யுடன் இணைந்து பயணிக்கும் ஒப்பந்தத்தை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் செய்தது.

சினிமாத்துறை தற்போது உள்ள மோசமான சூழ்நிலையில், பெரிய முதலீட்டு படங்கள் மட்டுமல்லாது, சிறு முதலீட்டுப் படங்களும் பயனடையும் வகையில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, FEFSI-யுடன் இணைந்து, ஒரு JAC (Joint Action Committee) குழுவை அமைத்து அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ் சினிமாவில் தற்போது தேவைப்படும் மாற்றங்களை கொண்டுவருவது மிகவும் அவசியம் என்று கருதுகிறோம்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான முக்கிய வழிகளை நமது இரு சங்கங்களும் உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில், இன்னொமொரு தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பது எந்த வகையிலும், தமிழ் சினிமாவுக்கு பயன் தராது. அதற்கான தேவையும் இல்லை. அது நமது செயல்பாடுகளை திசை திருப்பி விடும். நம் இரு சங்கங்களும் FEFSI-யுடன் இணைந்து, தேவைப்படும் மாற்றங்களை கொண்டுவருவதே, விரைவான மாற்றங்களுக்கு வழி என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம். இதை செயல்படுத்த, தங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை பேசி தீர்க்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்பட, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தயாராக உள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் சினிமாவின் நலனுக்காக, எங்களின் ஆலோசனைகளை மனதில் கொண்டு, நல்ல முடிவெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,

T.G. தியாகராஜன்
செயல் தலைவர்

T. சிவா
பொதுச் செயலாளர்

G. தனஞ்ஜெயன்
பொருளாளர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments