வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதி இம்முறை தேர்வு செய்திருக்கும் படம் தேஜாவு. புதுமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். மதுபாலா, காளிவெங்கட், அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
எழுத்தாளர் அச்யுத்குமார் எழுதும் த்ரில்லர் கதைகள் உண்மையில் நடப்பது காவல்துறைக்கு தெரியவருகிறது. அவர் எழுதுவது உண்மையில் நடக்கிறதா?, அல்லது நடப்பதை தெரிந்து கொண்டு அவர் முன்கூட்டியே அதை எழுதுகிறாரா? அல்லது நடக்கும் க்ரைம் சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறா? என பல்வேறு மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க நியமிக்கப்படுகிறார் சிறப்பு காவல் அதிகாரி அருள்நிதி. காவல்துறை அதிகாரி அதிகாரியான அருள்நிதி ஆடும் ஆடுபுலி ஆட்டம்தான் தேஜாவு.
முதலிலேயே சொன்னதுபோல், எப்படித்தான் இது போன்ற கதைகளையும், திறமையான இயக்குனர்களையும் அருள்நிதி தேடிப்பிடிக்கிறார் என்று தெரியவில்லை. சிறப்பான திரைக்கதை, மிகச்சிறப்பான கூர்மையான வசனங்கள் என தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
இவரை விட்டால், இக்கதாபாத்திரத்துக்கு வேறு யாரும் செட் ஆகமாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் அருள்நிதி. மதுபாலா, காளி வெங்கட் ஆகியோர் தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகன் அருள்நிதியின் கதாபாத்திரத்துக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அச்யுத் குமார். படத்தின் மொத்த கனத்தையும் தாங்கிப்பிடிக்கும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் அச்யுத்.
இது போன்ற த்ரில்லர் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை மிக நேர்த்தியாக கொடுத்திருகிறார் ஒளிப்பதிவாளர் முத்தையா. படத்தில் பாடல்கள் இல்லை ஆயினும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஜிப்ரான். இது போன்ற வித்தியாசமான அதே நேரம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையிலான படங்கள் நிறைய வரவேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது
தேஜாவு மிரட்டல்