Friday, November 15, 2024
Home Uncategorized தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் படங்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் படங்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான முக்தா சீனிவாசன், கோவை செழியன், கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், இராமநாராயணன் ஆகியோரது திருவுருவப் படங்களை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, ஏ.எஸ். பிரகாசம், கே.முரளீதரன், சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி எஸ். தாணு , விஷால் கிருஷ்ணா ஆகியோருக்கு நினைவுக்கேடயங்களை வழங்கினார்.

அமைச்சருக்கு நினைவு கேடயத்தை தலைவர் என். இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன், துணைத்தலைவர் எஸ்.கதிரேசன், கெளரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

விழாவில் பாரதிராஜா பேசுகையில், ” சிறு முதலீட்டு படத்தயாரிப்பாளர்களுக்கு அரசு உதவிட வேண்டும். அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும். நலிந்த தயாரிப்பாளர்கள் என்ற வார்த்தையே இனி இல்லாமல் அவர்களை பாதுகாத்திட அரசு உதவிட வேண்டும் ” என்று பேசினார்.

சேம்பர்சார்பில் காட்ர கட்ட பிரசாத், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சி.கல்யாண், டிஜிட்டல் பிலிம் அசோசியேசன் தலைவர் கலைப்புலி’ஜி.சேகரன், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஏ. எஸ்.பிரகாசம், கே.முரளீதரன், டி.ஜி.தியாகராஜன், கேயார், எஸ்.தாணு, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி அவர்கள் பேசுகையில், “பாரம்பரியம் மிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அழைப்பினை ஏற்று சிறப்பித்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி. திரையுலகினரின் நலனுக்காக சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினையும் நிலுவையில் உள்ள தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கிட தங்களிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கையினை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் “என்று பேசினார்

இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், “தயாரிப்பாளர்களில் நலிந்த தயாரிப்பாளர்கள் என்று கூறுவது மனதிற்கு சங்கடமாக உள்ளது. நானும் சிறுமுதலீட்டு படத்தயாரிப்பாளர் தான். எனக்கு அதில் உள்ள சிரமங்கள் அனைத்தும் தெரியும் படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் உதவி தொகை கேட்டு பெறுவது வருத்தமடைய செய்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் கொடுத்தவர்கள் கொடுக்கும் இடத்தில இருப்பவர்கள். ஆகவே அந்த நிலை மாற வேண்டும் “என்று பேசினார்

அமைச்சர் அவர்கள் பேசுகையில் திரையுலகம் நசிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் கொரோன தொற்று மேலும் அழுத்தி இந்த தொழிலை நசுக்கியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எனக்கும் பலவகையில் ஒத்துவருகிறது என்பதில் மகிழ்ச்சி. ஏனென்றால் என் தகப்பனாரின் சகோதரர் எங்கள் ஊரிலே ஒரு திரையரங்கை நடத்தி கொண்டிருந்தார் அந்த திரையரங்கில் பல மணி நேரம் மாலை நேர வேலையில் நான் அங்கு தான் இருந்தேன். அதே சமயம் முத்தமிழறிஞர் ஐயா டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த திரையுலகை கண்ணை காப்பது போல் நேசித்து இந்த திரையுலகை தனது இதயமாக வைத்திருந்த இந்த துறைக்கு நான் அமைச்சராக இருப்பது எனக்கு கிடைத்த பெருமை.
அதே போல அவருடைய வழியில் மாண்புமிகு நமது தமிழக முதல்வர் அவர்களும் திரையுலகை நேசிக்க கூடியவர். அதே போல அவர் மட்டுமல்ல அவரது வாரிசாக இருக்க கூடிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கழக இளைஞர் அணி செயலாளர் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஒரு நடிகராக ஒரு தயாரிப்பாளராக இருப்பது சிறப்பான ஒன்றாகும்.
இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர்களின் படங்களை திறந்து வைக்கும் பொழுது இன்னும் சொல்ல போனால் எங்கள் கொங்கு மண்டலத்தின் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே அய்யா கோவை செழியன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கும் பொழுது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது.
எனவே பல விதங்களில் ஒத்துபோகக்கூடிய நிகழ்ச்சியாக இந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எனக்கும் அமைந்துள்ளது பல நேரங்களில் சங்கத்தின் தலைவர் திரு, முரளி அவர்களும், செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பல நேரங்களில் தொழிலில் உள்ள சூழ்நிலைகளை எடுத்து கூறுவார்கள்
இதை யோசித்து பார்ப்பேன் நான் ஒரு விவசாய குடும்பத்தினை சார்ந்தவன், ஒரு விதத்திலே விவசாயமும் இந்த திரைத்துறையும் ஒத்துப்போகிறது. தயாரிப்பாளர் நிலையம் விவசாயி நிலையும் ஒரே மாதிரி தான் உள்ளது. உழைத்த விவசாயிகள் சொல்லுவார்கள் செலவு பத்தணா வரவு எட்டணா என்று சொல்வார்கள். அதே போல இங்கயும் சூழ்நிலை இருக்கிறது என்பதை இவர்கள் பேசும்போது தெரிந்து கொள்வேன். அதே நேரத்தில் எல்லாருக்கும் எல்லாவுமான திராவிட மாடல் ஆட்சியை மாண்புமிகு அண்ணன் தளபதி அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் வாரிசாக நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை முதல்வர் அவர்களுக்கு நான் எடுத்து செல்வதற்கு முன்னாலேயே அவருக்கு போய் சேர்ந்துவிடும் இங்குள்ள நிலைமைகள் அவருக்கும் தெரியும். இந்த கொரோன வந்து உலகளவில் பொருளாதார நிலைமையை மாற்றி அமைத்துள்ளது. அதே சமயம் குடிநீர் தேவை உட்பட வளர்ச்சி பணியையும் செய்தாக வேண்டும். அரசிற்கு எல்லா துறைகளிலும் சலுகைகள் கேட்டு கோரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. இங்கு சங்கம் வைத்துள்ள கோரிக்கைகள் நிதி நிலைமை வைத்து சரி செய்யபடும். அதே சமயம் ராஜாஜிஹால் மியூஸியம் வள்ளுவர் கோட்டம் அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான துறை ரீதியான அனுமதியை பெற்று தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தயாரிப்பாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித்தர நானும் மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இனைந்து மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித்தர உறுதுணையாக இருப்போம். அதே சமயம் தமிழ்நாடு தினம் அதே தேதியில் தான் இந்த தயாரிப்பாளர்கள் சங்கமும் துவங்கியுள்ளது என்பது ஒரு ஒற்றுமையாக உள்ளது. இந்த சங்கத்தின் 44 வது ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது இப்பொழுதுகூட திரைப்படக் கல்லூரியை உலகத்தரத்தில் மேம்படுத்த திட்டப்பணிக்காக முதல்வர் ரூபாய் பத்து லட்சம் ஒதுக்கி உள்ளார். “என்று பேசினார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், விஜயமுரளி, பழனிவேல், ராஜேஷ்வரி வேந்தன், பைஜாடாம், ராமச்சந்திரன், மற்றும் கபார் , சரவணன்,
சக்கரவர்த்தி, ஈஸ்வரன்,
திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம், சேம்பர் கிருஷ்ணாரெட்டி, வினியோகஸ்தர்கள் சங்க துணைத்தலைவர் நந்தகோபால், செயலாளர் காளையப்பன் உட்பட ஏராளமான திரைப்பட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி தொகுத்து வழங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments