Sunday, November 24, 2024
Home Uncategorized நாயகன் சித்தார்த் பேசும்போது,

நாயகன் சித்தார்த் பேசும்போது,

“இந்த 2024ல் ஒரு விஷயத்தை வேகமாக பரவ வைக்க வேண்டும் என்றால் நெகட்டிவ்வாக சொன்னால் தான் தீ போல பரவுகிறது. செய்திகளுக்கு வைக்கப்படும் புகைப்படங்கள், டைட்டில்கள், நிகழ்ச்சியின் ஹைலைட்டுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் நெகட்டிவ் விஷயங்கள் தான் வேகமாக பரவுகிறது.
அப்படி ஒரு விஷயத்தை தேட ஆரம்பித்தால் நமக்கே திடீரென ஏதோ ஒன்று மிஸ்ஸிங் ஆகிறது என தோன்றும். அதனால் நான் பாசிடிவையே தேடி போக வேண்டும்.
‘மிஸ் யூ’ வெட்டு, குத்து, ரத்தம், வன்முறை, வன்மம் என எதுவுமே இல்லாத ஒரு பாசிட்டிவான ஃபீல் குட் படம். 90களில் விஜய் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்த காலத்தில் எல்லா படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். கலர்ஃபுல்லாக இருக்கும். நல்ல ஒரு பாசிட்டிவான சோசியல் கருத்தையோ, நகைச்சுவை கருத்தையோ, நட்பு, காதல் என நல்ல குணங்களை பற்றி உயர்த்திக் காட்டப்படுகின்ற வகையில் எடுக்கப்பட்ட கமர்சியல் படங்களை தான் நாங்கள் பார்த்து இங்கே வந்திருக்கிறோம்.

இந்த 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் இவற்றில் பெரிதாக எனக்கு வித்தியாசம் தெரியாது, எனக்கு ஐபோன்-14-க்கும் ஐபோன்-16க்குமே வித்தியாசம் தெரியாது. இந்த படத்தில் 90ஸ் கிட்ஸ் தான் கேரக்டர்களாக இருப்பார்கள்.
இந்த படத்தின் கதையை சொல்வதற்காக இயக்குனர் ராஜசேகர் வந்தபோது காதல் கதை என்றதுமே, தயவு செய்து வேண்டாம். பத்து வருடமாக அந்த பக்கமே நான் தலை வைத்து படுக்கவில்லை என்றேன்.
காரணம் தெலுங்கில் அதுபோல நிறைய பண்ணி வேறு எந்த படங்களும் எனக்கு வராமல் போய் எதற்கெடுத்தாலும். காதல் கதைகள் மட்டுமே வந்தது. என்னால் அது மட்டும் தான் பண்ண முடியும் என்கிற ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கி விட்டார்கள். லெட்டர் கூட எழுதி வைக்காமல் அப்போது காதலை விட்டு ஓடி வந்தவன் தான். இன்னும் அந்த பக்கம் போகவே இல்லை. காதலில் சொதப்புவது எப்படி தான், நான் கடைசியாக நடித்த முழுக்க முழுக்க காமெடி ரொமான்ஸ் படம்.. அது கூட நான் முதலில் தயாரித்த படம் என்பதால்.. அதற்குப் பிறகு வேறு எதுவும் பண்ணவில்லை.

சரி கதை சொல்லுங்கள் எப்படியும் நோ தான் சொல்லப்போகிறேன் என்றேன். அவர் எடுத்ததுமே உலகத்திலேயே உங்களுக்கு பிடிக்காத ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல போகிறீர்கள் என்றார். இதை கேட்டதும் சரி என ஒப்புக் கொண்டாலும் அவரிடம் நீங்களும் நானும் பார்க்காத ஒரு காதல் படமாக இதை எடுப்போம். ஏற்கனவே அரைத்த மாவையே அரைக்க நாம் இருவருமே தேவையில்லையே என்று கூறிவிட்டேன். அப்படி எடுத்தால் தான் இந்த காலத்து பசங்க கிரிஞ்ச் என சொல்லாமல் இருப்பார்கள்.

கடந்த பத்து வருடங்களில் நிறைய லவ் படங்கள் ஜெயித்து இருக்கின்றன. அதனால் இதை எடுத்தோமா என்றால் இல்லை. இது கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். காதல் கதைகளுக்கு காலம் தாண்டிய ஒரு வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். எனக்கும் அது தெரியும். நான் தெலுங்கில் நடித்த போது என்னுடைய காதல் படங்களை பார்த்த ரசிகைகள் இன்று திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் என்னை பார்க்கும்போது நீங்கள் ஏன் காதல் படத்தில் நடிப்பதில்லை என்று கேட்கிறார்கள். அவர்கள் அதற்கு சொல்லும் காரணம், நாங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு நல்ல பையனை செலக்ட் பண்ணி திருமணம் செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதில் உங்களுடைய தூண்டுதலும் பங்களிப்பும் இருக்கிறது. ஏனென்றால் எப்போதுமே நீங்கள் நல்ல பசங்க, அவர்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசி இரண்டு பேர் எதற்காக லவ் பண்ண வேண்டும் ஒரு பெண்ணிற்கு ஒரு பையனை ஏன் பிடிக்க வேண்டும் என்கிற காரணங்களை ரொம்பவே நியாயமாக சொல்லி இருப்பீர்கள். நாங்கள் எங்கள் பையன்களை கூட உங்களது படங்களை காட்டித்தான் வளர்க்கிறோம் என்றார்கள்.

சொல்லப்போனால் எல்லா ஜேனர் கதைகளையுமே மீண்டும் திரும்ப ஒருமுறை எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அடுத்து வரப்போகும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு காதல் என்றால் என்ன, நாம் ரசித்த விஷயங்கள் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளும் விதமாக நாம் காட்ட வேண்டும். இது எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும். ரியாலிட்டி சம்பந்தப்பட்ட விஷயமாகவும் அதே சமயம் சினிமாவுக்கான அழகு இரண்டுமே இதில் இருக்கும். அதனால் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை தைரியமாக வெளியிட இருக்கிறார்கள்.

கார்த்தியை பற்றி இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சர்தார் 2 நைட் ஷூட்டிங் வைத்துக் கொண்டு எனக்காக இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தான். மணி சார் படத்தில் நாங்கள் இருந்த சூட்டிங் பாட்டில் நடந்த விஷயங்களை பற்றி சொன்னவன் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டான். அப்போது நான் கார்த்தியிடம் நீயும் என்னை போல ஒரு நடிகனாகத்தானே ஆகப்போகிறாய் என்று கேட்டேன். ஆனால் அதற்கு கார்த்தி நானெல்லாம் உன்னை மாதிரி இல்ல மச்சி, நான் டைரக்ஷனில் தான் போகஸ் ஆக இருக்கிறேன். நான் பண்ணினால் டைரக்சன் தான் என்று சொன்னான். ஆனால் கொஞ்ச நாளிலேயே பருத்தி வீரன் பட அறிவிப்பு வருகிறது. அப்போது நான் போன் பண்ணினால் எடுக்கவே பயந்தான். அதன் பிறகு ஏதோ சொல்லி சமாளித்தான். இந்த நட்பு இப்போது வரை தொடர்கிறது.

நான் சமீப காலத்தில் பார்த்த ரொம்ப ரொம்ப பாசிட்டிவான படம் ‘மெய்யழகன்’. அந்த மாதிரி ஒரு படத்தை ஒப்புக்கொண்டு கமர்சியல் ஹீரோவான கார்த்தி அதில் நடித்து வெளிவந்தது உண்மையிலேயே ஹேட்ஸ் ஆப் கார்த்தி. படம் பார்த்துவிட்டு நீண்ட நேரம் அழுதபடி கார்த்தியிடம் உணர்ச்சிகளை கொட்டினேன். அதை கார்த்தியும் ரொம்பவே ரசித்து கேட்டான்.

இந்த படத்தின் டிரைலரை கார்த்தி வெளியிடுவதன் மூலம் ரசிகர்களிடம் ஒரு பாசிட்டிவான அதிர்வுகளை கொண்டு செல்ல முடியும் என்பதால் தான் இதை ‘மெய்யழகன்’ தான் வெளியிட வேண்டும் என அழைத்தேன். சித்தா என்கிற படத்தை நான் எடுத்து முடித்து பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அந்த படம் எடுப்பதற்கு எனக்கு இரண்டு வருடம் ஆனது. அந்த படத்தின் கதை மீதான நம்பிக்கை வைத்து அதை உணர்ந்து அந்த சமயத்தில் நான் கொஞ்சம் சீரியசான ஒரு இடத்தில் இருந்தேன். அடுத்து நான் கேட்கும் கதை ஜாலியாக இருந்தால் நன்றாக இருக்கும்.. சந்தோசமாக சிரித்துக் கொண்டு சூட்டிங் போய் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.. அந்த வகையில் இந்த ‘மிஸ் யூ’ படத்தின் படப்பிடிப்பு தளம் ரொம்பவே கலகலப்பாக இருந்தது.

கருணாகரனும் நானும் ஜிகர்தண்டா படத்தில் இருந்து நண்பர்களாக ஊறி விட்டோம். எல்லா விஷயத்திலும் தான். கருணாகரனிடம் எனக்கு பிடித்தது அவருடைய குரல். இந்த படத்தில் நண்பன் என்றால் இப்படி கூட இருப்பார்களா என்று நினைக்கும் அளவிற்கு அவர் கதாபாத்திரம் இருக்கிறது. இந்த படத்தை மூன்று தலைமுறையை சேர்ந்த குடும்பத்தினர் போய் பார்த்தாலும் அவர்கள் மூவருக்குமே இந்த படம் தொடர்பு படுத்தி பார்க்கக் கூடியதாக இருக்கும். சஷ்டிகா இந்த படத்தில் தோழியாக நடித்துள்ளார். எங்க பிரெண்ட்ஸ் குரூப்பிலேயே அதிகம் படித்த புத்திசாலி டாக்டர் கதாபாத்திரம் அவருடையது தான். பால சரவணன், சஷ்டிகா இருவரும் செட்டில் அடிக்கும் லுட்டிகள் காமெடி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். படத்திலும் அதே எனர்ஜியை கொண்டு வந்திருக்கிறார்கள். பால சரவணன் ஒரு அற்புதமான நடிகர். லப்பர் பந்து படத்தில் அவர்கள் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்தது.

இப்போது இங்கே அமர்ந்திருக்கும் இந்தப்படத்தின் நடிகர்கள் 20 வருடம் கழித்தும் தமிழ் சினிமாவில் நல்ல நகைச்சுவை நடிகர்கள், நல்ல குணச்சித்திர நடிகர்கள் என்கிற பெயரோடு இருப்பார்கள். நான் இப்போது சொன்ன விஷயங்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு காரணங்களாக இருந்தாலும் இரண்டாவது முறை இந்த படத்தை பார்ப்பதற்கு ஆவலாக தூண்டும் நபராக நிச்சயமாக கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் தான் காரணமாக இருப்பார். சுப்புலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒரு லவ் ஸ்டோரி ஒழுங்காக ஒர்க் பண்ண வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஹீரோயின் செலக்சன் சரியாக இருக்க வேண்டும். அவர்கள் நடிப்பு சரியாக இருக்க வேண்டும். அப்படி அழகான ஹீரோயின் அழகாக நடித்து விட்டால் அந்த லவ் ஸ்டோரி தானாகவே ஜெயித்து விடும். படத்தில் நாங்கள் இருவரும் சேர வேண்டும் என ரசிகர்கள் ஏங்குவார்கள் என்கிற விதமாகத்தான் நாங்கள் நடித்து இருக்கிறோம்.

ஆஷிகா தமிழில் இடைவெளி விடாமல் படம் பண்ண வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் சின்ன வயதில் இருந்தே நான் உங்களுடைய ரசிகை என்று சொல்லி என்னை அடிக்கடி கிண்டலடித்து கொண்டே இருப்பார். இப்படி ஒரு ரசிகையுடன் நடிப்பது இதுதான் எனக்கு முதல் தடவை. அப்படி ஒரு ரசிகை பக்கத்தில் இருப்பது நல்லது தான். நமக்கு ஆலோசனைகள் சொல்வதற்கு உதவியாக இருக்கும். அடுத்த படத்தில் என்னுடன் 3 பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என பிராமிஸ் வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அது மறுக்கவே முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து பீச்சில் ஜாலியாக ஸ்வீட் காரம் காபி சாப்பிட்டுவிட்டு அந்த இரவு நிம்மதியாக தூங்கினால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அந்த ஒரு உணர்வை இந்த படம் நிச்சயம் உங்களுக்கு கொடுக்கும்” என்று கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments