Friday, September 20, 2024
Home Uncategorized 'வாஸ்கோடகாமா' திரைப்பட விமர்சனம்

‘வாஸ்கோடகாமா’ திரைப்பட விமர்சனம்

நகுல் ,அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார்,முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி,மதன்பாப்,நமோ நாராயணா ,ஆர். எஸ் .சிவாஜி, லொள்ளு சபா சேஷு ,பயில்வான் ரங்கநாதன் , படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். சதீஷ்குமார் என். எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார்.அருண் என்.வி இசையமைத்துள்ளார்.5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.

நாட்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகுவதை நினைத்து கலிகாலம் முற்றிவிட்டது என்பார்கள். அநியாயம் அதிகரிக்கின்ற இந்த யுகத்தையே கலியுகம் என்று கூறுகிறார்கள். இதில் விரோதங்களும் குரோதங்களும் துரோகங்களும் அதிகரித்து இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிலை எப்படி மாறி இருக்கும் என்கிற ஒரு கற்பனை தான் இந்தப் படம். படத்தின் கதையை ஒருவரியில் கூறினால் நல்லவர்கள் எல்லாம் நன்மை செய்ததற்கான தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறார்கள் .தீயவர்கள் எல்லாம் சிறைக்கு வெளியே இருந்து கொண்டு அநியாயங்கள் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்ட சூழலில் மனித பாத்திரங்களின் சித்தரிப்பும் நாட்டு நடப்பும் எப்படி இருக்கும் என்கிற கற்பனையைப் பின்னணியாக்கி ஒரு கதையை எடுத்துக் கொண்டு வாஸ்கோடகாமா என்கிற 125.43 நிமிடங்கள் கொண்ட படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கதாநாயகி அர்த்தனா பினு நல்லவர். ஒரு நல்லவரை விரும்பி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர்.அவருடைய அப்பா ஆனந்தராஜ் ,தனது பெண்ணுக்கு ஒரு அக்மார்க் அயோக்கியனையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஏனென்றால் நாட்டில் நல்லவர்களுக்கு இடம் இல்லை.ஆனால் நல்லவரான நகுலை, அர்த்தனா விரும்புகிறார். தந்தை சொற்படி கேட்பது போல் நம்ப வைத்து திருமணமும் நடக்கிறது.
இதற்கிடையில் நல்லவரான நகுல் சிறைக்குச் செல்கிறார். அங்கே சிறையில் அநியாயக்காரர்களுக்கும் நல்லவர்களுக்கும் நடக்கும் முரண்பாடுகளையும் தர்ம, அதர்மங்களையும் கலந்து நகைச்சுவை முலாம் பூசி காட்சிகள் அமைத்து முழுப் படமாக எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அதில் இடம்பெற்ற,’நாட்டின் மதுப் பிரியராகத் தொடர்ந்து நீடித்து நாட்டிற்கு வருவாய் ஈட்டப் பாடுபடுவேன் என்றும்,சாதி மதம் இனம் மொழி போன்ற பாகுபாட்டைக் கொண்டு வந்து மனிதர்களைப் பிரித்து நாட்டின் அமைதியைச் சீர்குலைப்பேன் என்றும் உளமார நான் உறுதி கூறுகிறேன்’ என்ற உறுதிமொழி பலராலும் கரணிக்கப்பட்டது. இதுவே படத்தின் கதையின் தன்மையைக் கூறும்.

‘பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ‘என்று பாரதி சொன்னது போல் தீயவர்கள் கைக்கு ஆட்சி போனால் என்ன நடக்கும் என்கிற கற்பனை சுவாரஸ்யமானது.அதை தீவிரமாக யோசித்து திரைக்கதை அமைத்து காட்சிகள் உருவாக்கி இருந்தால் இந்தப் படம் நகைச்சுவைப் படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியிருக்கும்.

படத்தின் முதல் பாதியில் நகுல் அவரது குடும்பம் அர்த்தனா பின் அவரது குடும்பம் என்று காட்சிகளால் நகர்த்துகிறார்கள் .

படத்தின் இரண்டாவது பாதியில் வாஸ்கோடகாமா சிறைச்சாலையில் காட்சிகள் விரிகின்றன. நன்மை செய்தவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள்.

சிறையில் உள்ள நல்லவர்களுக்கும் அவர்களை கெட்டவர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் கொண்ட அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தைக் கலகலப்பான நகைச்சுவையாக மாற்றிக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

ஒரு காலத்தில் இப்படிப்பட்ட கற்பனைகள் மிகை போல் தோன்றினாலும், அதற்குப் பிறகான காலங்களில் நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம். இன்று சொன்னால் நம்ப முடியாத ஆனால் அப்படியே எதிர்காலத்தில் நிகழ இருக்கும் சில அநியாயங்களும் இதில் காட்டப்பட்டுள்ளன.

நல்ல மனிதர்கள் எல்லாம் நல்லது செய்து அதற்காக தண்டனை பெற்றுச் சிறைக்குள் நுழையும்போது பெயர்கள் மாற்றி வேறு வித ஆட்களாக மாற்றப்படுகிறார்கள்.அப்படி கப்பர், மார்கோ, ஜாக், பினு, பீட்டர் இன்றைய ஏகப்பட்ட பாத்திரங்கள் வருகின்றன.

சாக்லேட் பாயாக அறியப்பட்ட நகுல் இதில் நல்லவர் போலவும் முரட்டுத் தோற்றத்திலும் வருகிறார். சிறைக்கு வெளியே அவருக்கு வாசுதேவன் என்பது பெயர். உள்ளே சென்றதும் ஜாக் ஆகிறார். அழகான தோற்றம் அப்பாவித்தனமான சிரிப்பு என்று லட்சணா பாத்திரத்தில் வரும் நாயகி அர்த்தனா பினுவுக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.
அதேபோல் எதிர்மறை நிழல் படிந்த கோவர்தன் பாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா வருகிறார்.சாமியார் வேடத்தில் வந்து வில்லத்தனம் செய்கிறார்.

படத்தில் ஏராளமாக நடிகர்கள் வருகிறார்கள். அனைவருக்கு மே பளிச்சிடும்படியான பாத்திர வாய்ப்புகள் இல்லாததால் மேலோட்டமாகத் தோன்றுகிறார்கள்.
படத்தின் முதல் பாதியில் அசட்டுத்தனமான காட்சிகளால் நெளிய வைப்பவர்கள், இரண்டாம் பாதியில் நம்மைத் தேற்றி விடுகிறார்கள்.

இதே கதையை மிகவும் சீரியஸாகவும் எடுத்திருக்கலாம் .அதிரடி நகைச்சுவையாகவும் மாற்றி இருக்கலாம் . இயக்குநர் ஆர்ஜிகே . .நல்ல வேளை இரண்டாம் பாதியில் சற்று கலகலப்பான காட்சிகள் இடம்பெற்றுப் படத்தைக் காப்பாற்றுகின்றன .

படத்தின் பட்ஜெட்டுக்கும் கதைக்கு ஏற்ற சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் அருணின் இசையும் அமைந்துள்ளதைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. இயக்குநர் தான் காட்சிகளைச் சுவாரஸ்யப்படுத்த . அதன் மூலம் தனது போதாமையை உணர வைத்துள்ளார்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் சிரிப்பை மட்டுமே எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments