Tuesday, January 7, 2025
Home Uncategorized ’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.

பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது, “எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”.

எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகத்தில் பல படங்களை ஓடிடிக்கு கொடுத்து வந்தோம். ஆனால், பேஷன் ஸ்டுடியோஸூக்கு ‘மகாராஜா’ பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் மணிகண்டன், “இந்தப் படத்தில் என்னுடைய ரோல் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால், இப்போது படம் பார்த்தப் பிறகுதான் கதையே எனக்குத் தெரிகிறது. நிறைய பாராட்டுகள் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது. ‘மகாராஜா’ படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி”

நடிகை சாக்‌ஷனா, “நான் எதிர்பார்க்காத அளவுக்கு நிறைய பேர் என்னைப் பாராட்டி வருகிறார்கள். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் நித்திலன் சாருக்கு நன்றி. என் அப்பாவுக்கும் நன்றி”.

நடிகர் அருள்தாஸ், “தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘மகாராஜா’ படம் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. நித்திலன் சின்சியரான இயக்குநர். படப்பிடிப்புத் தளத்தில் எங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குறுகிய காலத்தில் விஜய்சேதுபதிக்கு ஐம்பதாவது படம் வெற்றியாக அமைந்துள்ளது சாதாரண விஷயம் கிடையாது. எங்கள் எல்லோருக்கும் இது சந்தோஷமான விஷயம். படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே இது பெரிய பெயர் வாங்கித் தந்துள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”

நடிகர் வினோத், “இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சேது சாருடைய நடிப்பு மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”.

நடிகர் கல்கி, “தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதங்களாக நல்ல படம் இல்லை என்ற பேச்சு எழுந்தபோது, ‘என்னடா அங்க சத்தம்?’ என்று வந்த படம்தான் ‘மகாராஜா’. உங்களுடைய அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. பழகுவதற்கும் சரி, நடிப்பிலும் சரி எங்கள் அண்ணன் சேது ‘மகாராஜா’தான்!”.

நடிகர் துரை, “’மகாராஜா’ படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வரம்தான். நேற்று இரவு காசி டாக்கீஸில் போய் படம் பார்த்தோம். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. சேது அண்ணன் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம்”.

எடிட்டர் ஃபிலோமின்ராஜ், “படத்தில் எல்லோருமே சிறப்பான வேலை செய்துள்ளனர். சேது அண்ணாவின் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்”.

நடிகை மம்தா மோகன்தாஸ், “நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய்சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!”.

இயக்குநர் நித்திலன், “என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்‌ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கம்புலி அண்ணாவை இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள். ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றி தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்து சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்த கதைக்கு அவர் வில்லன் எனத் தேர்ந்தெடுத்தேன். படத்தின் கதை கேட்டு ஓகே செய்த தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது, “இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments