Thursday, January 9, 2025
Home Uncategorized திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைப்பில் கின்னஸ் சாதனை படைத்த நிகழ்ச்சி

திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஒருங்கிணைப்பில் கின்னஸ் சாதனை படைத்த நிகழ்ச்சி

திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தது.

இந்த சாதனைக்கு பின்னரான சவால்கள் குறித்து விவரிப்பதற்காக கலைஞர்களுக்கு தெருக்கூத்து பயிற்சியளித்த திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய தலைவர் சிவா, தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் ஐஏஎஸ் (ஓய்வு) மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநரும், தெருக்கூத்து கலைஞருமான சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், ”என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘வெங்காயம்’ எனும் திரைப்படத்தில் தெருக்கூத்து கலையைப் பற்றியும், கலைஞர்களைப் பற்றியும் அழுத்தமாக விவரித்திருந்தேன். இதனை அனைத்து ஊடகங்களும் குறிப்பிட்டு எழுதி என்னுடைய முயற்சியை பாராட்டி இருந்தன.

நான் திரைத்துறைக்கு வருகை தந்த பிறகு தான் தெருக்கூத்து கலையின் அசலான மதிப்பினை உணர்ந்தேன். சினிமாவில் ஒவ்வொரு பிரிவிற்கும் பத்து உதவியாளர்களை வைத்து பணியாற்றுவோம். ஒப்பனை, சிகை அலங்காரம், ஆடை வடிவமைப்பு ,சண்டை பயிற்சி, இயக்கம் என ஒவ்வொன்றுக்கும் தேவையான உதவியாளர்களை வைத்து தான் பணியாற்றுவோம். ஆனால் நம்முடைய தாத்தாக்களும் தந்தைமார்களும் கிராமப்புறத்தில் தெருக்கூத்து கலையை நிகழ்த்தும்போது, அவர்களே ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம் செய்து கொண்டு மேடை ஏறிய பிறகு நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் செய்வார்கள். அதிலும் கடை கோடியில் உட்காந்து ரசிக்கும் ரசிகர்களுக்கும் கேட்கும் வகையில் மிகவும் உரக்கப் பாடுவார்கள். நிகழ்ச்சி முடியும் வரை ஆற்றல் குறையாமல் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் தெருக்கூத்து கலையை நிகழ்த்துவார்கள். அவர்களின் கலை ஈடுபாடு இந்த தருணத்தில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இது அழிந்து வரும் கலை… நலிவடைந்து வரும் கலை… என சொல்வதை விட இதற்கு ஆக்கப்பூர்வமாக நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். களத்தில் இறங்கி எதையெல்லாம் செய்தால் இதனை மீட்டெடுக்க இயலும் என யோசிக்க தொடங்கினேன். முதலில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மற்றும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இது நடைபெற வேண்டுமா..! இது அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், பள்ளி ஆண்டு விழாக்கள், அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகள் என பல இடங்களிலும் இந்த தெருக்கூத்து கலையை நிகழ்த்தும் அளவுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என திட்டமிட்டேன். இதற்கான முன்னெடுப்பை ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன்.

இதன் பிறகு முதன்முதலாக கம்போடியா நாட்டிலுள்ள அங்கோர்வாட் எனுமிடத்தில் உள்ள ஆலய வளாகத்தில் அரங்கேற்றம் செய்தோம். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள தமிழர்கள், தமிழர் அல்லாதவர்கள் என பலரும் இந்த தெருக்கூத்து கலையை கொண்டாடிய விதம் என்னுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தருணத்தில் இந்த தெருக்கூத்து கலை மிகப்பெரிய அளவிலான கலை வடிவம் என்பதை உணர்ந்தேன்.

அதன் பிறகு இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அதாவது அவர்களும் ரசிக்கத்தக்க வகையில் இந்த கலையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். ஏனெனில் தெருக்கூத்து என்றால் இரவு முழுவதும் நடனமாடுவார்கள். புரிந்து கொள்ள இயலாத கடும் தமிழில் உரையாடல்களும் வசனங்களும் இடம் பெற்றிருக்கும். சில இடங்களில் ஆபாச தொனியில் வசனங்கள் இடம் பெறும்.. இத்தகைய விஷயங்களையெல்லாம் மாற்றி அமைக்கலாம் என திட்டமிட்டேன்.

இந்தியாவில் உள்ள மாணவர்களை விட வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் தமிழில் பேசுவதே கடினமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இந்தக் கலைக்கான தமிழ் மொழி வடிவத்தை அவர்களுக்கு கற்பித்து மேடை ஏற்றுவது என்பது கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக அவர்களுக்கு இத்தகைய கலைகளின் மூலமாக மொழியை கற்பிப்பது எளிதாக இருந்தது. இளம் கலைஞர்கள் இந்த கலைக்கான தமிழ் மொழி வடிவத்தை எளிதாக உட்கிரகித்துக் கொண்டு பேசி நடித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த தெருக்கூத்து கலையின் நீளத்தை குறைத்து செழுமைப்படுத்தினேன்.

பின்னர் தெருக்கூத்து கலையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற வட இந்திய நாயகர்களை போற்றும் கதைகள் தான் அதிகம். ஏன் தமிழில் நாயகர்கள் இல்லையா..? தமிழில் கதைகள் இல்லையா..? என தேடத் தொடங்கினேன். அதன் பிறகு சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவற்றை வாசித்த போது ஏராளமான கதைகள் கிடைத்தன.

அந்தத் தருணத்தில் வள்ளல்கள் என்ற கருத்துருவில் கதைகளை தேடத் தொடங்கிய போது.. பத்துக்கும் மேற்பட்ட கதைகள் கிடைத்தன. அதியமான், குமணன், பாரிவள்ளல் என ஏராளமான வள்ளல்களின் கதைகளும், அவர்களின் அசலான வாழ்வியல் சம்பவங்களும் கிடைத்தன. அதனை தெருக்கூத்தாக உருமாற்றினோம்.

இது ஏன் எனில் தெருக்கூத்து கலைஞர்களாக வேடமிடுபவர்கள் தமிழர்கள். பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். அதனால் தமிழ் கதாநாயகர்களை பற்றிய தெருக்கூத்து கதையை உருவாக்கினோம். இதனை மேடையேற்றும் போது மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தத் தருணத்தில் இது போன்ற கலையை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என எண்ணிய போது எங்களுக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு அறக்கட்டளையின் தொடர்பு கிடைத்தது.

அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தொடர்பு கிடைத்தவுடன்.. அவர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்வில் தெருக்கூத்து கலையினை மேடையில் நிகழ்த்த விரும்பினோம். இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர். அத்துடன் உலக மக்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக இந்த தெருக்கூத்தினை நடத்திட வேண்டும் என்றனர். இந்த எண்ணத்தை தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் முன்வைக்க நானும் இந்த ஒரு தருணத்திற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறி அந்த வாய்ப்பினை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டேன்.

இங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள 300 கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி அளித்து, சிகாகோ நகரில் 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முன்னிலையில் தெருக்கூத்து கலையினை அரங்கேற்றினோம். அங்கு கின்னஸ் சாதனையாளர்களுக்கான ஆய்வுக் குழுவினர் வருகை தந்தனர். நிகழ்ச்சியை முழுவதுமாக உன்னிப்பாக கண்காணித்து, வெளிநாடுகளில் ஒரே தருணத்தில் அதிகமான கலைஞர்கள் கலந்து கொண்டு மேடையில் நிகழ்த்திய தெருக்கூத்து கலை மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி இதுதான் என கின்னஸ் சாதனைக்கான சான்றிதழையும் அங்கீகாரத்தையும் அளித்தனர். இந்த அங்கீகாரம் கிடைத்த போது இதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சியில் திளைத்தோம்.

நம் ஊரில் கூத்தாடி என்பது தகாத சொல். அதாவது கெட்ட வார்த்தை. நம் சமூகத்தில் தரக்குறைவாக மதிப்பிடப்படும் தெருக்கூத்து கலையை உலகத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சியாக நடத்தி அதற்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்தது என்பது இந்த கலையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்குமான கௌரவம் என கருதுகிறேன். இதற்கு ஆலமரமாக திகழ்ந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக நிர்வாகிகளுக்கும், இந்திய நிர்வாகிகளுக்கும், சர்வதேச அளவிலான நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சிவா பேசுகையில், ”தமிழ்நாடு அறக்கட்டளை 1974ம் ஆண்டில் பால்டிமோர் எனும் இடத்தில் ஐந்து நபர்களால் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாகாணங்களில் தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளை இயங்கி வருகிறது. அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களில் நன்கொடை திரட்டி, அதனை தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் முதன்மையான நோக்கம். கல்வி, பெண்கள் வேலை வாய்ப்பு, சுகாதாரம், ஊரக மேம்பாடு ஆகிய நான்கு திட்டங்களை லட்சியமாகக் கொண்டு எங்களது அறக்கட்டளை இயங்கி வருகிறது.

2019ம் ஆண்டில் சிக்காகோ நகரில் உலக தமிழ ஆராய்ச்சி மாநாட்டை எங்களது அறக்கட்டளை தான் முன்னின்று பொறுப்பேற்று நடத்தியது. இந்த மாநாட்டில் 5000க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

50 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என திட்டமிட்டோம். இதற்காக சிக்காகோ நகரில் மூன்று நாட்கள் விழா நடத்தவும் தீர்மானித்தோம். இந்த விழாவின் நோக்கமாக தமிழர் பண்பாட்டை மேலோங்க செய்யும் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டோம். மேலும் 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அறக்கட்டளையை இயங்கச் செய்த நிர்வாகிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், அங்கு வாழும் தற்போதைய இளம் தலைமுறையினருக்கும், தமிழகத்தில் உள்ள பூர்வீக தமிழர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கான கலாச்சார ரீதியிலான உறவை நீட்சி அடைய செய்யும் வகையிலும் மூன்று நாள் விழாவை நடத்த திட்டமிட்டோம்.

மேலும் பொன்விழா நிகழ்வில் திரட்டப்படும் நன்கொடையை மூலதனமாகக் கொண்டு தமிழகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவும் இந்த விழாவை நடத்தினோம்.

இது தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது சங்ககிரி ராஜ்குமார் தெருக்கூத்து கலையை மேடையேற்றலாம் என ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அப்போது இந்த கலையை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், இந்த கலையை சார்ந்து இயங்கும் நலிந்த கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கச் செய்வதற்காகவும் இதனை மேடையற்ற ஒப்புக்கொண்டோம். அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தான் இதில் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்று மேடை ஏறிய கலைஞர்களுக்கான உடைகள், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு அனைத்தும் தமிழகத்திலிருந்து தான் வரவழைத்தோம். இவ்வளவு நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்தது மகிழ்ச்சி. கின்னஸ் சாதனை கிடைத்ததால் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ஒரு பெருமிதமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் பேசுகையில், ”அரசாங்க அதிகாரியாக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற பின் இந்த அறக்கட்டளையின் தமிழக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று ஆறாண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். நம்மில் பலருக்கும் தெருக்கூத்து என்றால் தெரியாது. இந்தக் கலையை அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இரண்டு மாத காலம் பயிற்சி அளித்து, அவர்களை மேடை ஏற்றி தெருக்கூத்தினை நிகழ்த்த வைத்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதற்காக இயக்குநர் சங்ககிரி ராஜகுமாரை பாராட்டுகிறேன்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நானும் சிகாகோவிற்கு சென்றிருந்தேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. அங்கு வருகை தந்திருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிகழ்ச்சியை வெகுவாக பாராட்டினர். தமிழ்நாட்டிற்கு வெளியே இந்த கலையை எடுத்துச் சென்று மேடை ஏற்றிய இயக்குநர் சங்ககிரி ராஜகுமாரை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.

2017ம் ஆண்டிற்கு பிறகு தான் அமெரிக்காவிலிருந்து இந்த அறக்கட்டளைக்கு ஓரளவு நன்கொடை வரத் தொடங்கியது. தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அமெரிக்காவில் 1500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் கொடுக்கும் நிதி மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, இவற்றையெல்லாம் சேகரித்து தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள். அதனை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பிறகு ஆறு கோடி ரூபாய் நிதி நன்கொடையாக கிடைத்தது. இந்த ஆண்டும் இதே அளவிற்கான நன்கொடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நன்கொடை நிதியை மூலதன நிதியாக பயன்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 99 கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மெல்ல கற்றல் திறன் கொண்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்றல் மேம்பாட்டிற்காக செலவழிக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் ஆறாயிரம் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதனை அடுத்து கிராமப்புற பகுதிகளில் வாழும் ஏழை எளிய பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். இதற்காக பரிபூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் தமிழக அரசுக்கும், நன்கொடை வழங்கி வரும் அமெரிக்கா வாழ் தமிழ்நாடு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் அமெரிக்க உறுப்பினரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரன் பேசுகையில், ”தெருக்கூத்து கலையை மேடை ஏற்ற வேண்டும் என்று குழு விவாதம் நடைபெற்ற போது, இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினேன். பிறகு நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘கின்னஸ் சாதனை படைத்திட வேண்டும் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு’ என சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக சிகாகோ மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களில் இருந்தும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை திரட்டினோம். தொடங்கும் போது எளிதாக இருந்தது. அதன் பிறகு சங்ககிரி ராஜ்குமாரிடம் பேசத் தொடங்கிய போது.. குறிப்பாக கலைஞர்களுக்கான உடை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்ற விஷயங்களை பற்றி விவாதித்த போது சவால்கள் உருவாகின. இந்தியாவில் உருவான ஆடைகளை சேகரித்து பாதுகாத்து அதனை அமெரிக்காவுக்கு வரவழைத்தோம்.
தலையில் வைத்துக் கொள்ளும் சின்ன கிளிப்புகள் கூட நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் ராஜ்குமார் உறுதியாக இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐந்து வயது குழந்தைகள் முதல் அறுபது வயது நபர்கள் வரை கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் தமிழ் தெளிவாக உச்சரிக்கத் தெரியாது. பயிற்சி தொடங்கிய மூன்று நாட்கள் வரை மாணவக் கலைஞர்களுக்கு இதன் மீது நாட்டமே இல்லை. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பு வரை எனக்கும் முழு நம்பிக்கை ஏற்படவே இல்லை. முந்நூறு கலைஞர்கள் வருவார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை. ஆனால் தெருக்கூத்து கலைக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பு செய்து உடை வந்த பிறகு அதனை நான் அணிந்து ஒப்பனை செய்து கொண்டு வீடியோவாக தயாரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிறகு தான். அனைவருக்கும் ஆர்வம் ஏற்பட்டு, பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டனர்.

ஒத்திகையை நாங்கள் முதலில் இணையதளம் வழியாகவும் பிறகு குழுவாக பிரித்தும் மேற்கொண்டோம். மாணவ கலைஞர்களுக்கு தெருக்கூத்து என்றால் என்ன என்பதை தெளிவாக புரிய வைப்பதற்கு ஒரு மாத காலம் ஆனது. அதனைத் தொடர்ந்து அதியமான் யார் என கேள்வி எழுப்புவார்கள். அதை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சிறப்பான திரைக்கதை மூலம் நேர்த்தியாக விளக்கினார்.

நான் இந்த நிகழ்ச்சியில் கட்டியக்காரனாக வேடமிட்டிருந்தேன். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால்.. இயல்பான தமிழில் அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ளும் தமிழில் பேசலாம் என்ற சௌகரியம் இருந்தது.

தெருக்கூத்து என்ற உடன் புராணக் கதைகளை மட்டும் பேசாமல் இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களை திரைக்கதையில் இயக்குநர் இணைத்து இருந்தார்.

மேடை ஏறிய கலைஞர்களில் நான் மட்டுமே இதற்கு முன்னர் அரிதாரம் பூசி சில திரைப்படங்களில் நடித்த அனுபவம் உண்டு. வேறு யாரும் இதற்கு முன் மேடை ஏறியதில்லை. ஆனால் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அனைத்து மாணவர்களுக்கும் பொறுமையாகவும், நிதானமாகவும் பயிற்சி அளித்து அவர்களை தயார் செய்தார்.

கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைக்குமா என்ற பதட்டமும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் மாணவக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை நேர்த்தியாக நடத்திக் காட்டினர். கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வெற்றியின் மூலம் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இந்த பிரம்மாண்டமான தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் படைத்த இந்த சாதனையை நாங்கள்தான் மீண்டும் முறியடிப்போம். தெருக்கூத்து கலையை எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அங்கெல்லாம் ஒரு விழாவாக எடுத்துச் சென்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணமாக இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமார் போன்ற கலைஞர்கள் மேலும் வரவேண்டும். இந்த கலையை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும்,” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments