Friday, November 15, 2024
Home Uncategorized தமிழ்நாட்டில் படத்தை ரிலீஸ் செய்வதே எங்களுக்கு பான் இந்தியா அனுபவத்தை கொடுத்தது - ‘ஃபாரின் சரக்கு’...

தமிழ்நாட்டில் படத்தை ரிலீஸ் செய்வதே எங்களுக்கு பான் இந்தியா அனுபவத்தை கொடுத்தது – ‘ஃபாரின் சரக்கு’ தயாரிப்பாளர் ஆதங்கம்

பல புறக்கணிப்புகளை தாண்டி படம் வெளியாவதே எங்களுக்கு வெற்றி தான் – ‘ஃபாரின் சரக்கு’ இயக்குநர் மகிழ்ச்சி

300 கலைஞர்கள் அறிமுகமாகும் ‘ஃபாரின் சரக்கு’ படம் ஜூலை 8 ஆம் தேதி ரிலீஸ்

கப்பலில் பணியாற்றியவர்களால் எடுக்கப்பட்ட ‘ஃபாரின் சரக்கு’ ஜூலை 8 ஆம் தேதி வெளியாகிறது

குஜராத்தையும், தமிழகத்தையும் கதைக்களமாக கொண்ட ‘ஃபாரின் சரக்கு’ – 8 ஆம் தேதி ரிலீஸாகிறது

’ஃபாரின் சரக்கு’ வழக்கமான படமாக இருக்காது – இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி நம்பிக்கை

நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரித்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியதோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர் ஆகிய மூன்று பேரும் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே குறும்படங்களை எடுத்துள்ளனர். பிறகு மூவருக்கும் சினிமா மீது இருந்த ஆசை மற்றும் ஆர்வத்தினால் திரைப்படத்துறையில் நுழைவதென்று முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, தங்களைப் போல் சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்களுடைய படம் மூலம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்த இவர்கள், ‘ஃபாரின் சரக்கு’ படத்தில் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 300 கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளனர்.

வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் மக்கள் குரல் ராம்ஜி, குணா உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ’ஃபாரின் சரக்கு’ படக்குழுவினரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோபிநாத் பேசுகையில், “சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகவே நாங்கள் இந்த படத்தை எடுத்துள்ளோம். படத்தின் இயக்குநர் விக்னேஸ்வரன் நான் மற்றும் சுந்தர் கப்பலில் பணியாற்றும் போதே சில குறும்படங்களை எடுத்தோம். அதை பார்த்தவர்கள் பாராட்டியதோடு, எங்கள் கான்சப்ட் மற்றும் மேக்கிங் குறித்தும் பாராட்டினார்கள். எனவே அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது விக்னேஸ்வரன் தன்னிடம் சினிமாவுக்கான இரண்டு கதை இருப்பதாக கூறினார். அதில் நாம் முதல் படமாக இந்த கடையை பண்ணலாம் என்று கூறி ‘ஃபாரின் சரக்கு’ கதையை சொன்னார். எனக்கு ரொம்ப பிடித்தது. சில விஷயங்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அப்போது சீனாவில் இருந்து சிங்கப்பூர் கப்பலில் செல்வதற்குள் கதையில் சில விஷயங்களை சேர்த்து சொன்னார். உடனே படத்தை தொடங்க முடிவு செய்தோம். அதன்படி கப்பலில் இருந்து வந்ததும் படத்தை தொடங்கினோம். பல போராட்டங்களை சந்தித்து இந்த படத்தை எடுத்திருந்தாலும் இறுதியில் படம் பார்த்த போது இயக்குநர் சொன்னதை விட படத்தை சிறப்பாக எடுத்துக்கொடுத்தார். அனைத்தையும் முடித்து ஜூலை 8 ஆம் தேதி வெளியீட தயாராகி விட்டோம். இனி ஊடகங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இது மாதத்தின் ஆரம்பம், அனைவரும் சம்பளம் வாங்கியிருப்பீர்கள், செழிப்பாக இருப்பீர்கள், பல செலவுகளை செய்து ஜாலியாகவும் இருப்பீர்கள், அப்படியே சிறு பட்ஜெட்டை ஒதுக்கி ஜூலை 8 ஆம் தேதி எங்கள் ‘ஃபாரின் சரக்கு’ படத்தையும் பார்க்க வேண்டும். நிச்சயம் நீங்கள் செலவு செய்யும் டிக்கெட் பணத்திற்கு முழு திருப்தியளிக்கும் வகையில் படம் இருப்பதோடு, முழுமையான ஆக்‌ஷன் எண்டர்டெயின்மெண்ட் படத்தை பார்த்த அனுபவத்தையும் தரும். நிச்சயம் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.

இப்போது பான் இந்தியா என்ற ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளது. ஆனால், எங்கள் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதே எங்களுக்கு பான் இந்தியா ரிலீஸ் போல் இருந்தது. அவ்வளவு கஷ்ட்டப்பட்டோம். அப்படி இருந்தும் எங்கள் மீதும் எங்கள் படத்தின் மீதும் பல விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் நம்பிக்கை வைத்தார்கள். அவர்களுடைய நம்பிக்கையால் தான் எங்கள் படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜான் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், இது தான் எனக்கு முதல் படம். எனக்கு மட்டும் அல்ல என்னை போல் 300 கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கிறார்கள். எங்களால் முடிந்த அளவுக்கு உழைப்பை போட்டிருக்கிறோம். படமும் மிக நன்றாக வந்திருக்கிறது. படம் பார்த்த பிறகு உங்களுக்கே தெரியும். எங்களால் முடிந்த அளவுக்கு படத்தை எடுத்துவிட்டோம், இனி மக்களிடம் சேர்ப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. நல்ல படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ஊடகங்கள் எங்கள் படத்தையும் மக்களிடம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.” என்றார்.

இசையமைப்பாளர் பிரவீன்ராஜ் பேசுகையில், “வணக்கம், இது தான் எனக்கு முதல் படம். இயக்குநர் இந்த வாய்ப்பு அளித்த போது முதலில் பயந்தேன். நான் இதுவரை ஆல்பம் பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்திருப்பதால் இந்த படத்தை நம்மால் பண்ண முடியுமா? என்று யோசித்தேன். ஆனால், இயக்குநர் விக்னேஷ்வரன் எனக்கு தைரியம் கொடுத்து, என் கூடவே இருந்தார். படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கிறது. படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும். என்னால் முடிந்த பெஸ்ட்டை கொடுத்திருக்கிறேன். படம் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகிறது, பத்திரிகையாளர்கள் எங்கள் படத்திற்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தொகுப்பாளர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், “இயக்குநர் விக்னேஷ்வரனுக்கும், தயாரிப்பாளர் கோபிநாத்துக்கும் முதலில் நன்றி. எனக்கு இப்படி ஒரு படம் முதல் படமாக அமைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ்வரைன் சிந்தனை மிக வித்தியாசமாக இருக்கிறது. அவருடன் பணியாற்றியதால் நான் நிறைய கற்றுக்கொண்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி வெளியாகிறது. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதோடு இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் சுந்தர் பேசுகையில், “’ஃபாரின் சரக்கு’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதோடு, படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றிருக்கிறேன். இந்த படத்தை எடுத்துக்கொண்டிருந்த போதும் சரி, எடுத்து முடித்த போதும் சரி, பல சிக்கல்கள் மற்றும் தங்கல்களை எதிர்கொண்டும். அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு படத்தை வெளியீட்டுக்கு கொண்டு வந்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டும் இன்றி இன்று பத்திரிகையாளர்கள் முன்னியில் எங்கள் படம் குறித்து பேசும் இந்த நிகழ்ச்சியும் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த படத்தில் பலரது உழைப்பு இருக்கிறது. ஒருவரை பிரித்து பார்த்தால் கூட இந்த படம் முழுமை பெறாது. எனவே படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷ்வரனை கப்பலில் இருக்கும் போதே எனக்கு நன்றாக தெரியும், அவருடன் சேர்ந்து நான்கு குறும்படங்களை எடுத்திருக்கிறோம். அவரிடம் பல திறமைகளும், ஐடியாக்களும் இருக்கிறது. அவருக்கான சரியான வாய்ப்பு கிடைத்தால் அவர் பெரிய இடத்திற்கு நிச்சயம் செல்வார். அவரிடம் இப்போதே பத்துக்கும் மேற்பட்ட கதைகள் இருக்கிறது. நிச்சயம் அவர் சினிமாவில் பெரிய இடத்துக்கு போவார், அவருக்கு என் வாழ்த்துகள். அடுத்தது படத்தின் தயாரிப்பாளர் கோபிநாத். அவர் இல்லை என்றால் இந்த படம் இல்லை. அவர் தான் ஊக்களித்ததோடு, பணமும் முதலீடு செய்து இந்த படத்தை ஆரம்பித்தார். அவருக்கு நன்றி. அடுத்தது எனது பெற்றோர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெற்றோர்களுக்கு நன்றி. அவர்கள் எங்களை படம் எடுக்க அனுமதித்தார்கள். அவர் அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் இங்கு வந்திருக்க முடியாது. எங்களின் ஆசை மற்றும் ஆர்வத்தை புரிந்துக்கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த குடும்பத்தார்களுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் எத்தனையோ படங்களையும், கலைஞர்களையும் கைதூக்கி விட்டிருக்கிறார்கள். எங்களையும் அவர்கள் கைதூக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி ‘ஃபாரின் சரக்கு’ படம் தியேட்டரில் வெளியாகிறது. பாருங்கள் நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான அஃப்ரினா பேசுகையில், “’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை கேட்டவுடன் நான் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை என்று இயக்குநரிடம் சொன்னேன். பிறகு அவர் என்னிடம் முழு கதையையும் சொன்ன பிறகு தான் இந்த படம் இளைஞர்களுக்கும் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான படம் என்று தெரிந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பலர் முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு திறை இருந்தும் வாய்ப்பு கிடைக்காது. அப்படி வாய்ப்பு கிடைக்காத பலரை தேடி தேடி இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஒருவர், இரண்டு பேர் அல்ல மொத்தம் 300 பேர் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் மற்றும் லைட் மேன் அண்ணன்கள் கூட இந்த படம் மூலம் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். புது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் என்ற போது நான் கூட ஆரம்பத்தில் படத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இந்த படம் வெளியாகுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஆனால், இவர்கள் இப்போது படத்தை வெற்றிகரமாக ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுடைய உழைப்பை நான் பார்த்து பிரமித்து போனேன். சிறு சிறு கற்கள் சேர்ந்தால் தான் சிற்பமாக முடியும் என்று சொல்வார்கள். அதுபோல இதான் 300 கலைஞர்கள் சேர்ந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் எங்கள் படத்திற்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன் பேசுகையில், “வணக்கம், ‘ஃபாரின் சரக்கு’ படத்தில் மகாலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 300 பேரில் நானும் ஒருவன். படம் ஜூலை 8 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. நீங்க அனைவரும் சப்போர்ட் பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகிகளில் ஒருவர் ஹரினி பேசுகையில், “இது எனக்கு முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தில் மகாலிங்கத்தின் மனைவியாக செல்வி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவில் நடிக்க அனுமதித்த என் பெற்றோருக்கு நன்றி. அவர்களின் ஊக்கம் தான் என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது. ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்களோ அத்தனையும் எங்கள் படத்தில் இருக்கிறது. ஜூலை 8 ஆம் தேதி தியேட்டரில் படம் வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு வழங்க வேண்டும், நன்றி.” என்றார்.

படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுரேந்தர் சுந்தரபாண்டியன் பேசுகையில், ‘ஃபாரின் சரக்கு’ படம் முழுக்க முழுக்க தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பினாலும் உருவான படம். திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களை தேடி தேடி வாய்ப்பு வழங்கிய இயக்குநர் விக்னேஷ்வரன் அவர்களுக்கு நன்றி. இந்த படம் மிகப்பெரிய வாழ்வியல் படம். நாம் அனைவரது வாழ்வியலோடும் கனெக்ட் ஆகும் ஒரு படம். நிச்சயம் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். பத்திரிகையாளர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகிகளில் ஒருவரான இலக்கியா பேசுகையில், “இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. நான் காதல் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படத்தில் முதல் முறையாக என்னை சண்டைக்காட்சிகளில் நடிக்க வைத்திருக்கிறார்கள். எனக்கு மிகவும் வித்தியாசமான வேடம். சண்டைக்காட்சிகளில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. படம் நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் படத்திற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும், நன்றி.” என்றார்.

இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமி பேசுகையில், “இந்த படம் ஆரம்பித்தது முதல், இந்த இடத்துக்கு வந்தது வரை அனைவரும் சொல்லிவிட்டார்கள். ஒரு சினிமா ரசிகனாக இருந்து சினிமாக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அதிகமாகி திறமை இருந்து அதை வெளிக்காட்ட முடியாத இடத்தில் இருந்து, என்னை போன்றவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான இடத்தில் நான் நிற்பதே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒருத்தன் ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபடுகிறார், ஓடுகிறான் என்றால், அவனிடம் நீ நன்றாக ஓடுகிறார் என்று சொன்னால், அவன் நன்றாக ஓடுகிறானோ இல்லையோ அவனுக்கு மிகப்பெரிய தைரியம் கிடைக்கும். அதுபோல, பல புதுமுகங்களுக்கு தைரியம் கொத்து வரும் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் உள்ளிட்ட ஊடகத்தினருக்கு பெரிய நன்றி. கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு புடிக்கும்.

எல்லோரும் 300 பேர் இந்த படத்துல அறிமுகமானதாக சொன்னாங்கல். அது ரொம்பவே குறைவு, இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அதுல நான் தான் முதல் ஆள். திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க, ஆனால், எங்களுடைய பட்ஜெட்டுக்கு 300 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க முடிந்தது. இன்னும் நிறைய பேர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். எல்லோரும் எனக்கு நன்றி சொன்னார்கள். ஆனால், நான் நன்றி சொல்வது கோபிநாத்துக்கு மட்டும் தான். எதுவேணாலும் எழுதலாம், யோசிக்கலாம் ஆனால் அது ஒரு படமாக உருவாக பணம் தான் முக்கியம். இறுதியாக பணம் தான் அனைத்தையும் முடிவு செய்யும். அந்த பணத்தை கொடுத்தது தயாரிப்பாளர் கோபிநாத் தான். அவர் இல்லை என்றால் இந்த படம் இல்லை. 300 பேர்கள் அறிமுகமாவதை எல்லோரும் பெருமையாக சொன்னார்கள். ஆனால், அதுவே எங்களுக்கு மைனஸாகவும் அமைந்தது. எல்லா இடத்திலும் உங்க படத்துல எல்லோரும் புதுஷாக இருக்காங்க, தெரிந்த முகங்களே இல்லை, என்று சொல்லி புறக்கணித்தார்கள். ஆனால், எனக்குள் இருந்த தைரியம், எந்த ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர்கள் முதல் படத்தில் புதுமுகங்களாக இருந்து தான் வந்திருப்பார்கள். அதுபோல் இந்த மேடையில் இருக்கும் புதுமுகங்கள் அனைவரும் எதிர்காலத்தில் பிரபலமானவர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அவர் அவர் வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்.

‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பு உங்களிடம் பல கேள்விகளையும், சிந்தனைகளையும் எழுப்பும். ஒருவரை பார்த்தவுடன் அவர் பற்றி நாம் ஒரு மதிப்பீடு செய்வோம். ஆனால், அவரிடம் பழகும் போது நாம் நினைத்தது போல் அவர் இருக்க மாட்டார். அதுபோல தான் இந்த தலைப்பு உங்களிடம் பல கேள்விகளையும், சிந்தனைகளையும் எழுப்பினாலும், படம் பார்த்த பிறகு ‘ஃபாரின் சரக்கு’ என்றால் உண்மையில் என்ன? என்பது உங்களுக்கு புரியும். குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு கதைக்களம். அதன் மையப்புள்ளி தான் ‘ஃபாரின் சரக்கு’.

பல புறக்கணிப்புகளை கடந்து இப்போது படம் ரிலீஸாக போவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு, இதையே ஒரு வெற்றியாகவும் பார்க்கிறோம். படம் வழக்கமான பாணியில் இருக்காது. சற்றி வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறோம். இந்த படத்தில் யாரும் ஹீரோ, ஹீரோயின் அல்ல. அனைவரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக தான் நடித்திருக்கிறார்கள். மூன்று பெண்கள் நடித்திருக்கிறார்கள், அவர்கள் ஹீரோயின் அல்ல, முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். உங்களிடம் படத்தை கொண்டு வந்து சேர்த்துவிட்டோம், மக்களிடம் படத்தை கொண்டு சேர்ப்பது உங்களிடம் தான் இருக்கிறது. நிச்சயம் நீங்கள் எங்களை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம், நன்றி.” என்றார்.

‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக் கொண்ட இப்படத்தின் எந்த ஒரு இடத்திலும் சிகரெட் புகைப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகள் இல்லாததால், மது மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு செய்யும் எச்சரிக்கை டைடில் கார்டு இல்லாத படமாக இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments