ஆழக் கவிக்கடலில்
வாழுகின்ற நெத்தலி நான்
அரசன் திமிங்கிலத்தை
வாழ்த்திவிட முனைவதுவோ…?
சாலப்பொருத்தமில்லையென்றாலும் எனதன்பை சாற்றிவிட எண்ணி வார்த்தைகளை தேடுகின்றேன்.
ஈழக்கவி இவனை
ஈரெட்டு வயதினிலே
ஈர்த்த பெருங்கவிநீ..
இனிப்பான உன்தமிழ்தான்
காலக்குயவனவன்
கவியாக எனை சமைக்க
கால்கோளாய் நின்றதென்று களிப்போடு கூறுகிறேன்.
காட்டெருமை சிலதின்று
கவிஞனா இவனென்று
காழ்ப்போடு உனைப்பற்றி கதையளக்கும்போதெல்லாம்
காட்டாறு உந்தன்
கவிதைகளைப் பார்த்தாலே
கழிவான குளங்களுக்கும் காய்ச்சல்வரும் என நினைப்பேன்…
கேட்டாலே இதமூட்டும்
நின்பாடல் வரிகளிலே
கேசாதிபாதம் முதல்
வழிகின்ற கவிதைகளை
கேட்டுவாங்கி மூவேளை குடித்தாலோ
கேடுகெட்டு பேசிடுவோர்
பெரும்பித்தம் குணமாகும்.
வேறு
செந்தமிழில் புதுமையினை
சேர்த்து நல்ல
செழுங்கவிதை நீபடைத்து நெஞ்சமர்ந்தாய்..
அந்தமிலா உன்படைப்பில்
என்னை ஆழ்த்தி
ஆசையுடன் அடிமையெனை ஆளவைத்தாய்
சந்தமழை சிந்துமுந்தன்
கவிதை யாவும்
சவளையென
சாக்கடைகள் தூற்றினாலும்
சந்தனமாய் மணங்கமழ்ந்து
மாந்தர் நெஞ்சில்
சாகாத வரம்பெற்று
வாழும் என்பேன்
வந்தனங்கள் சொல்கின்றேன்
இன்று வாழும்
வரலாற்று கவியென்றால்
நீயே என்பேன்
சிந்தனையில் வைரமுத்தாய் மின்னுகின்ற
சீர்கவியே சிறப்போடு நீடுவாழி!
வேறு
தமிழின்று உயிர்பெற்று
தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் தமிழுழவன் வைரமுத்து போலிருக்கும்..!
தமிழமுதின் ஒருசொட்டு தரணியிலே இருக்கும் வரை தமிழ்புலவன் இவன்விட்ட வேரிருக்கும்.!
வேறு
வடுகப்பட்டியில் பிறந்தாய்- தினம் வறுமை குடித்து வளர்ந்தாய் இருந்தபோதும் தளர்ந்திடாமல் தமிழைக்கொண்டு நிமிர்ந்தாய்..
கரிசக்காட்டில் நடந்தாய் -கழனி உழவனோடு கிடந்தாய்
உணர்ச்சி பொங்க வாழ்வைப்பாடி உலகமெங்கும் உயர்ந்தாய்..
அமிழ்தாய் கவிதை கொடுத்தாய்-எங்கள் அன்பை வாரி எடுத்தாய்..
தடைகள் நூறு வந்தபோதும்
தமிழை வாழ்வில் உடுத்தாய்..
எறும்பைப் போன்று உழைத்தாய்- தமிழ்
எழுத்தை இனிதாய் வளைத்தாய் -பகை வெட்டி வீழ்த்த வந்தபோதும் வீறுகொண்டு கிளைத்தாய்…
செய்யுள் மரபை உடைத்தாய்- நீ
புதிய கவிதை படைத்தாய்
அன்னை தமிழ் பட்ட கடனை
ஈரேழு வயதில் அடைத்தாய்..
உலகத் தமிழன் சொத்தாய்- நீ
உயர்ந்தாய் #வைரமுத்தாய் -பலர் கவிதை விருட்சமாக
நீயோ மாறியுள்ளாய் வித்தாய்..
கொடுமை கண்டு கொதித்தாய்- நீ
வறுமை உண்டு ஜெயித்தாய்
அந்த வகையில் எனக்கும் கூட
கவி வைரமுத்தும் என்தாய்..
கவிஞர் பொத்துவில் அஸ்மின்