குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.
உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது மாமன்னன் எடுத்த மாரி செல்வராஜ் வாழை என்ற குழந்தைகள் படத்தை எடுத்து வருகிறார். இந்த வரிசையில் குழந்தைகள் படம் ஒன்றை இயக்குகிறார் டிராபிஃக் ராமசாமி படத்தின் இயக்குநர் விக்கி.
இப் படத்தைப் பற்றி அவர் கூறிய போது,
“கேள்விகளால் உலகை அழகாக்கியவர்கள் குழந்தைகள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கும் போது அவர்களின் அறிவு விரிவடைகிறது. தொலைக்காட்சிகள் 90’களின் துவக்கத்திலும், இணையதளம் 90’களின் இறுதியிலும் தமிழகத்தில் பரவலாகத் தொடங்கின. இவை வீடு புகுந்து தமிழ்க் குடும்பங்களுக்குள் நுழைந்ததிலிருந்து புழுதியில் மண்ணுடன் மண்ணாக விளையாடிய குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. அதன் விளைவாக இப்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விகள் குறைந்துபோய் பதில்களாகவே நிறைந்து இருக்கிறது. இவர்களுக்கு உலகைப் பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது.
இப்படம் கூகுளும், யூடியூபும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்த பொற்காலத்தையும், அவர்களின் உலகத்தையும் நகைச்சுவையாகச் சொல்லும் கிராமத்துப் பின்னணியில் அமைந்ததாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு சென்னையிலும், நடிகர்கள் தேர்வு மதுரை, சிவகங்கை வட்டாரங்களிலும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது” இவ்வாறு இயக்குநர் விக்கி கூறினார்.