ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொள்ள, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு இந்தப்படத்தை வெளியிடும் விதமாக படக்குழுவினர் ரிலீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்
இந்தநிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தையும் பக்ரீத் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உயிர் தமிழுக்கு படம் ஏற்கனவே திட்டமிட்டபடி பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகுமா என்கிற புதிய கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மட்டுமல்ல, சென்டிமென்ட்டாகவும் இந்தப்படத்தை பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியிடுவதில் உறுதியாக இருகிறேறேன் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதம் பாவா கூறியுள்ளார்..
மாமன்னன் படம் அரசியலை சீரியஸாக பேசுகிறது என்றால் உயிர் தமிழுக்கு படம் இன்னொரு விதமாக நையாண்டி கலந்து அரசியலை பேச வருகிறது. அந்தவகையில் இந்த இரண்டு படங்களுமே ஆரோக்கியமான போட்டியுடன் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.