ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஸ், ஷிவதா ஆகியோர் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் தீராகாதல். சித்து குமார் இசையமைக்க, ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கால ஓட்டத்தில் வெவேறு பாதையில் சென்று, தங்கள் குடும்பத்தோடு வாழ்ந்துவரும் முன்னால் காதலர்கள் மீண்டும் சந்திப்பது, அதனால் ஏற்படும் சிக்கல், அதை தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்தான் தீராகாதல் படத்தின் கதை. முன்னால் காதலர்களான ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஸும் ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கின்றனர். இருவரும் மங்களூரில் தங்கி இருக்கும் இரண்டு வார காலத்தில் நட்புடன் பழகிவர, மீண்டும் பழைய காதல் துளிர்விட்டதா, அதன் காரணமாக இருவரின் வாழ்வில் நடக்கும் அசம்பாவிதங்கள் என பரபரப்பான ஒரு காதல் கதை.
’எங்கேயும் எப்போதும்’ படம் எப்படி ஜெய்-ன் திரைப்பயணத்தில் ஒரு முக்கியபடமாக அமைந்ததோ அதே போல் தீராகாதலும் ஜெய்-ன் நடிப்பில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். காதல், பாசம், முன்னால் காதலியை பார்த்த பரவசம், அதன் பிறகான பதட்டம் என நவரசங்களையும் தன் நடிப்பில் கொடுத்திருக்கிறார் ஜெய். சமீபகாலமாக நாயகியை மையப்படுத்தி வெளிவரும் படங்களில் கவனம் செலுத்திவரும் ஐஸ்வர்யா ராஜேஸுக்கு இப்படமும் சிறந்த படமாக அமைந்திருக்கிறது. ஹீரோ ஜெய் கதாபாத்திரத்துக்கு இணையான பாத்திரம் இன்னும் சொல்லப்போனால் சற்றே அதிர்ச்சி தரக்கூடிய கதாபாத்திரம், இக்கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தேவையான துணிச்சல் ஐஸ்வர்யாவுக்கு உண்டு. ஐஸ்வர்யாவின் கணவனாக வரும் அம்ஜத், ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதா என அனைவரும் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் மற்றும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத் இணைந்து முன்னாள் காதலர்களின் உணர்வுகளை திரையில் காட்டி இருக்கிறார்கள், சிறப்பான திரைக்கதை மற்றும் ஆழமான வசனங்கள் என எல்லோரையும் வசப்படுத்தி இருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமையாக இருக்கிறது, மங்களூரின் இயற்கை அழகை நம் கண்களில் விதைக்கிறார். சித்து குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பரவசமூட்டுகிறது. எடிட்டர் பிரசன்னா ஜி.கே வின் படத்தொகுப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக தங்கள் முன்னாள் காதல் காலத்தை நினைத்து உருகும் படமாக வந்திருக்கிறது தீராகாதல்
தீரா காதல்: தீரா நதி