Friday, November 15, 2024
Home Uncategorized விக்ரம் திரை விமர்சனம்

விக்ரம் திரை விமர்சனம்

இனிமேல் இப்படித்தான் என்று கமல்ஹாசனின் நாயகன் படத்தில் ஒரு வசனம் வரும், விக்ரம் படத்தை பார்த்திவிட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கும் குறிப்பாக திரை விமர்சகர்களுக்கும் இந்த வசனம் மனதுக்குள் தோன்றி இருக்கும். முந்தைய படங்களின் ரெஃபரென்ஸ் மற்றும் படத்தின் அடுத்த பாகத்துக்கான குறிப்பு என இனி புதிய அத்தியாங்களை தமிழ் திரையுலகம் எழுதத்தொடங்கி விட்டது என்பதை உணர்த்தி இருக்கிறது விக்ரம்.

காவல் துறையினர் கொல்லப்படுவது, அது குறித்து துப்புத்துலங்க களமிறங்கும் ஒரு அண்டர்கவர் ஆபரேசன் குழு, அக்குழு கண்டறியும் உண்மைகள் மற்றும் அக்குழுவின் செயல்திட்டம்தான் விக்ரம் படத்தின் கதை. கமல் படங்கள் என்றாலே ஒன்மேன் ‘ஷோ’தான், ஆனால் இப்படத்தில் மற்றவர்களுக்கு வழிவிட்டு முதல் பாதியில் சற்றே ஒதுங்கி இருக்கும் கமல், இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்து, எத்தனை பேர் வந்தாலும் நான்தான் உலக நாயகன், நான்தான் சிங்கம் என்று நடுங்க வைத்திருக்கிறார். நடிப்பு, நக்கல், நய்யாண்டி என கமல் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடுத்து பிரித்து மேய்ந்துவிட்டார். அடுத்தாக ஃபகத் ஃபாசில், இவருடைய நடிப்பு பற்றி சொல்வதற்கு முன்பு ஒரு சிறு குறிப்பு, இனி இவர் மலையாள நடிகர் இல்லை பான் இண்டியா ஸ்டார். விக்ரம் படத்தின் முதல் பாதி முகழுவதையும் தன் முதுகில் சுமக்கிறார். விஜய்சேதுபதிக்கு வித்தியாசமான கெட்டப், வித்தியாசமான ரோல், ஒரு வேளை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விக்ரம் படத்தின் வில்லன் கதாபாத்திரமான சத்யராஜ் பாத்திரத்தை நினைவுட்டும் விதமாக, இவருடைய கெட்டப் டிசைன் செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ, மிரட்டலான நடிப்பு. சூர்யா சொற்ப நேரமே வந்தாலும் திரையரங்கை அதிரவைத்துவிடுகிறார். அர்ஜுன் தாஸ், காயத்திரி, நரேன் என அனைத்து நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரங்களும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இதற்கு மேல் டெக்னிக்கலாக மிரட்டமுடியுமா என்று தெரியவில்லை. ரகம் ரகமாக இத்தனை துப்பாக்கிகளை இந்திய சினிமா பார்ப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். முழுக்க முழுக்க இரவு நேர காட்சிகளாக நீளும் இப்படத்தின் ஒளிப்பதிவு அவ்வளவு நேர்த்தி, இதற்காக இப்படத்தின் ஒளிப்பதிவாளார் கிரிஷ் கங்காதரனுக்கு விருதுகள் காத்திருக்கின்றன. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அடிப்பொலி செய்திருக்கிறார் அனிருத். படத்தொகுப்பு, சண்டை காட்சிகள் என அனைத்தும் உலகத்தரம். தன்னை ஒரு மிகச்சிறந்த இயக்குனராக மீண்டும் ஒரு முறை பறைசாற்றி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

முதல்பாதியின் ஆரம்ப காட்சிகள் சற்றே மெதுவாக நகர்வது தொய்வடையச்செய்தாலும், அது பக்காவான ஸ்டேஜிங் என்பது இரண்டாம் பாதியில் புரிகிறது. மொத்தத்தில் மூன்று ஆண்டுகள் காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு ஆனந்த தாண்டவம், கமல் மற்றும் லோகேஷ் ஆடி இருப்பது கொலைவெறித்தாண்டவம்.

விக்ரம் – கொலமாஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments