Friday, November 15, 2024
Home Uncategorized விடுதலை திரை விமர்சனம்

விடுதலை திரை விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் படம் விடுதலை பாகம் -1. இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். கௌதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் பின் தங்கிய மலைப்பகுதியின் வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் முடிவை எதிர்த்து விஜய் சேதுபதி தலைமியிலான மக்கள் படை என்ற புரட்சிக் குழு போராடிவர, மக்களை படையை அழிக்க சேத்தன் தலைமையிலான போலீஸ் கம்பெனி அந்த மலைப்பகுதியில் முகாமிடுகிறது. காவல் துறையால் அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலையில், அந்த முகாமுக்கு போலீஸ் ட்ரைவராக வருகிறார் சூரி. யார் மக்களின் உண்மையாக காவலர்? அரசா? காவல் துறையா அல்லது போராளி குழுவா என்பதே விடுதலை படத்தின் கதை.

நடிகர்களுக்காக கதை என்று இல்லாமல் கதைக்காக நடிகர்கள் என்று விடுதலை படத்தை எடுத்துள்ள இயக்குனர் வெற்றி மாறனுக்கு பாராட்டுக்கள். இந்திய திரையுலகில் இதுவரை வந்த படங்களிலும் சரி, இனிமேல் வரப்போகும் படங்களில் சரி, விடுதலை ஒரு மிக முக்கிய படமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவர் ஒரு நகைச்சுவை நடிகர் சிறிய சிந்தனை கூட எழாத அளவுக்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரி. விஜய் சேத்பதியின் திரைப்பயணத்தில் இது ஒரு மைல் கல் படமாக இருக்கும். நாயகி பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் தொடங்கி படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் மனதில் பதிகின்றன. நாயகியின் பாட்டி கதாபாத்திரம், ஏட்டய்யா பாத்திரம், என சொல்லிக்கொண்டே போகலாம்.

படத்தின் நாயகன் என்று இசைஞானி இளையராஜாவை சொல்லலாம். பாடல் வரும் நேரம், களம், பாடல் என அனைத்தும் நம்மை புல்லரிக்க வைக்கின்றன. பின்னணி இசை நம்மை படத்துக்குள் இட்டுச்செல்கிறது.

வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஜாக்கி அவர்களின் கலை இயக்கம் என அனைத்தும் படத்துக்கும் மிகப்பெரிய பலம். க்ளைமாக்சில் வரும் துப்பாக்கிச்சண்டை உலகத்தரம். கேமிரா, இசை, எடிட்டிங் என அனைத்தும் சேர்ந்து நம்மையும் மலைக்கிராமத்தின் ஓட்டு வீட்டின் மீது உருண்டு பிரண்டு, குறுகிய சந்துக்களின் வழியே ஓட வைக்கிறது. இப்படியாக பல விருதுகள் காத்திருக்கின்றன.

அடுத்த பாகத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் லீட், எப்போது அடுத்த பாகம் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. வாத்தியாரின் விஷ்வரூபத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்க வைத்திருக்கின்றனர்

விடுதலை: வரலாற்றுப் பதிவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments